செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் காலமாகியுள்ள நிலையில் அவர் செய்த ஆன்மீக புரட்சி இன்று வரை அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.
இவர் ஆன்மீக குருவாக போற்றப்படுகிறார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். அவர் பக்தர்களால் அம்மா என்றே அழைக்கப்பட்டார். அவர் ஆதிபராசக்தியின் அவதாரம் என்றே பக்தர்களால் நம்பப்படுகிறது.
மனித குலத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக இந்திய அரசு அவருக்கு 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ வழங்கியது. இவருக்கு மனைவி லட்சுமி அம்மாள், மகன்கள் ஜி.பி.செந்தில் குமார், ஜி.பி. அன்பழகன் ஆகியோர் உள்ளனர். இரு மகள்களும் உள்ளனர்.
பங்காரு அடிகளார் அரசியல் கட்சித் தலைவர்களால் மிகவும் போற்றப்பட்டவர். இவர் ஆசிரியராக இருந்து பின்னர் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலை தொடங்கினார். மேலும் அவர் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கி வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.
இதனால் அருளாசி வழங்குவதையும் குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 82. அவர் ஆன்மீக புரட்சி செய்துள்ளார். கோயில் கருவறைக்குள் ஆண்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் பெண்களும் செல்லலாம் என அந்த புரட்சியை செயல்படுத்தினார்.
இன்று வரை ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை போட்டுக் கொண்டு செல்லும் செவ்வாடை பக்தர்கள் கோயில் கருவறையில் உள்ள சுயம்புக்கு அபிஷேகம் செய்து வெளியே வரலாம். இது மட்டுமல்ல, மாதவிடாய் என்பது சிறுநீர், மலத்தை போன்று ஒரு கழிவுதான் என்றும் அது பாவம் இல்லை என்றும் அவர் கூறி மாதவிடாய் காலத்திலும் பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்ல அனுமதித்தார்.