குஜராத்தில் தடம் புரண்ட பயணிகள் ரயில்! விபத்துகளுக்கு காரணம் இதுதானா? மத்திய அரசு விழிக்குமா?

post-img
காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கிம் ரயில் நிலையம் அருகே சவுராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் கூட, தாதர் – போர்பந்தர் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மகாராஷ்டிராவின் தாதர் மேற்கு ரயில் நிலையத்தையும் குஜராத்தின் போர்பந்தர் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல இந்த ரயில் இன்று பிற்பகல் போர்பந்தர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. ஆனால் 27 கி.மீக்கு முன்னதாக கிம் எனும் ரயில் நிலையத்தில் இந்த ரயில் தடம் புரண்டது. இன்ஜினுக்கு அடுத்தாக உள்ள பயணிகள் அல்லாத 4 பெட்டிகள் தடம் புரண்டு இருப்பதாகவும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த சமீப ஆண்டுகளாகவே ரயில்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ள இந்த பிரச்னைக்கு என்னதான் காரணம்? எப்படி இதை சரி செய்வது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு துறை சார்ந்தவர்கள் பதில் அளித்துள்ளனர். வேலைவாய்ப்பு: ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையிலிருந்து 50,000 ஊழியர்கள் வெளியே செல்கின்றனர். ஆனால் அதே அளவுக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறதா? என்று கேட்டால் இல்லை என்றே பதில் வருகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த ஆட்கள் பற்றாக்குறை தற்போது 1.72 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது ரயில்வே துறையில் உடனடியாக 1.72 பணியார்கள் தேவைப்படுகிறார்கள். இதில் தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87,000 பணியாளர்களும், ஸ்டேஷன் மாஸ்டராக 64,000 பணியாளர்களும், லோகோ பைலட்டுகளாக 10,000 பணியாளர்களும், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15,000 பணியாளர்களும் தேவைப்படுகிறார்கள். தொழில்நுட்பங்கள்: பணியாளர்கள் ஒருபுறம் எனில் தொழில்நுட்ப குறைபாடு விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் 200 சிக்னல்கள் பழுதாகிறது. அதில் 100தான் சரி செய்யப்படுகிறது. காரணம் சிக்னல் கோளாறை சரி செய்ய 10 பேர் தேவை. ஆனால் அரசு 7 பேரை மட்டுமே அனுமதித்திருக்கிறது. இதனால் மீதமுள்ள 100 பழுதான சிக்னல்கள் ஒவ்வொரு ஆண்டும் சேர்ந்துக்கொண்டே பெரிய எண்ணிக்கையாக உயர்ந்திருக்கிறது. இதனை சரி செய்ய ரூ.7,800 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தண்டவாளம்: இரண்டு பிரச்னைகளை விட முக்கியமானது மூன்றாவது பிரச்னை. அதாவது தண்டவாளங்கள். சென்னை-மும்பை-ஹவுரா-டெல்லி இந்த வழித்தடம் இந்தியன் ரயில்வேயின் தங்க நாற்கர சாலை போன்றது. நாட்டின் மொத்த பாதையில் 20% தண்டவாளங்கள் இந்த வழித்தடத்தில் இருக்கிறது. மொத்த ரயில் போக்குவரத்தில் 55% ரயில்கள் இந்த வழியில்தான் பயணிக்கின்றன. எனவே தண்டவாள தேய்மானம் அதிகமாக இருக்கிறது. இந்த பிரச்னையை சரி செய்ய, ஒரு வழித்தடத்தில் 100 ரயில்கள் இயக்கப்படுகிறது எனில் அதில் 70 மட்டுமே இயக்க அனுமதி கொடுக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நேரத்தில் தண்டவாளங்கள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் உண்மையில் இந்த வழித்தடத்தில் 150 ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே 10,000 கி.மீ தண்டவாளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டியதுள்ளது” என்று கூறுகிறார்கள்.

Related Post