வரவேற்கிறோம்! ஆனால்.. மகளிர் இடஒதுக்கீட்டில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் !

post-img

டெல்லி: நாடாளுமன்றம், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதுநிறைவேற்றப்பட்டாலும் 2029ல் தான் நடைமுறைக்கு வரும் என கூறப்படும் நிலையில் இந்த மசோதா குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.


இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் பெண்களின் இந்த கோரிக்கை என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாடாளுமன்றம், சட்டசபையில் ஆண் பிரதிநிதிகளை விட பெண்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாக உள்ளது. அதோடு பெண்களுக்கான அதிகார பகிர்வு என்பது குறைவாக இருக்கிறது. இந்நிலையில் தான் சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 1996ல் தேவேகவுடா பிரதமராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது.


ஆனால் இந்த மசோதா நிறைவேற்ற முடியவில்லை. அதன்பிறகு சில முறை முயற்சி செய்தாலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த முடியவில்லை. இதனால் கடந்த 27 ஆண்டுகளாக இந்த இடஒதுக்கீடு என்பது அமலுக்கு வராமல் உள்ளது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவு செய்தது. இதற்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். இதனை பல கட்சியினரும் ஆதரிக்கின்றன. இதனால் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

 

அதேவேளையில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமலுக்கு வராது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் தான் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றிய விவாதம் கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛பெண்களாக நாங்கள் எப்போதும் இந்த மசோதா அமல்படுத்துவதை வரவேற்கிறோம். இருப்பினும் மசோதாவின் அனைத்து உட்பிரிவு மற்றும் மசோதாவின் நோக்கம் குறித்த முழுவிஷயத்தை நாங்கள் இன்னும் படிக்கவில்லை. தற்போதைய சூழலில் இந்த மசோதாவை திமுகவாக வரவேற்போம்.


ஏனென்றால் பெண்களுக்கான இடஒதுக்கீடு உரிமை, பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் உள்ளிட்டவற்றில் முன்னோடியாக தமிழகம் உள்ளது. இதனால் இந்த மசோதாவை வரவேற்போம் ஆனால் மசோதாவின் அனைத்து உட்பிரிவுகளையும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நுணுக்கங்களையும் பார்க்க வேண்டும்'' என்றார்.

 

Related Post