சென்னை: வயது என்பது வெறும் எண்கள்தான். ஆனால், உயிர்வாழ்வதற்கும் வயதிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு வயதே ஆகக்கூடாது என்று நினைத்தால் நீங்கள் உடனே செல்ல வேண்டிய இடம் நெப்டியூன்தான் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் வயது இருக்கிறது. வயதை கொண்டுதான் ஒரு பொருளை நாம் அடையாளம் காண்கிறோம். சில பொருட்களுக்கு வயது அதிகம் இருந்தால் மதிப்பு கூடுகிறது. சில பொருட்களுக்கு வயது குறைவாக இருந்தால் மதிப்பு குறைகிறது. உதாரணமாக சில குறிப்பிட்ட வகை ரெட் ஒயின்கள் (போர்டியாக்ஸ்) 40 ஆண்டுகள் வரை பதப்படுத்தப்பட்டு இருக்கும். இதனால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும். ஆனால் எலக்ட்ரானிக் பொருட்கள் அப்படியல்ல. அது பயன்படுத்தப்பட்ட காலம் குறைவாக இருந்தால் மட்டுமே அதற்கு மவுசு.
ஆனால் உயிர் உள்ள பொருட்களுக்கு இந்த விதிகள் அப்படியே தலைகீழாக மாறிவிடும். அதாவது, ஒரு உயிர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறதோ அதற்கேற்றவாறு அந்த உயிர் வாழும் சமூகத்தில் அதன் மதிப்பு கூடுகிறது. இருப்பினும் எப்போதும் இளமைக்கு என தனி அடையாளம் இருந்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்களை எடுத்துக்கொள்ளுங்கள் நாம் எப்போதும் இளமையாகவே இருக்கவே விரும்புகிறோம். முதுமை நமக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. ஆயினும் இளமையே நமக்கு அவசியமானதாக இருக்கிறது.
தற்போதைய நவீன காலத்தில், மனிதர்களை எப்படி இளமையுடன் வைத்துக்கொள்வது என்பது குறித்த ஆய்வுகள் அதிகரித்துள்ளன. இதற்காக புதிய புதிய மருந்துகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அவை இன்னும் பரிசோதனையில்தான் இருக்கிறது. முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இப்படி இருக்கையில்தான் வயதை குறைத்துக்காட்ட வேண்டும் எனில், அதற்கு நெப்டியூன் கிரகத்திற்கு போக வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அங்கு போனால் வயது குறைந்துவிடாது. ஆனால், உங்களுக்கு வயதே ஆகாது என்று சொல்ல முடியும். பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இதை ஒரு வருடம் என்று சொல்கிறோம். வருடங்களை வைத்து வயது கணக்கிடப்படுகிறது. இதே நீங்கள் புதன் கிரகத்திற்கு சென்றால் விரைவில் உங்களுக்கு வயது அதிகமாகிவிடும். அதாவது புதன் கிரகம் 88 நாட்களில் சூரியனை சுற்றி வந்துவிடும். ஆக பூமியில் 88 நாட்கள் என்பது புதன் கிரகத்தில் 1 வருடத்திற்கு சமம்.
வெள்ளி கிரகத்தில் 225 நாட்கள் ஒரு வருடமாகும். செவ்வாய் கிரகத்தில் 687 நாட்களும், வியாழன் கிரகத்தில் 4333 நாட்களும்(11.86 வருடம்), சனி கிரகத்தில் 10,759 நாட்களும்(29.49 வருடம்), யுரேனஸ் கிரகத்தில் 30,687 நாட்களும் (84 வருடம்), இறுதியாக நெப்டியூன் கிரகத்தில் 60,190 நாட்களும் (164.8 வருடம்) ஒரு ஆண்டுக்கு சமமாகும்.
ஆக இருப்பதிலேயே நெப்டியூன் கிரகம்தான் சூரியனை சுற்றி வர அதிக காலத்தை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் அங்கு சென்றால், அந்த கிரகத்தின் கணக்குப்படி வெறும் 0.3 ஆண்டில் உங்களுக்கு 60 வயது ஆகியிருக்கும். சுருக்கமாக சொல்வதெனில் நீங்கள் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்குள் இறந்துவிடுவீர்கள். ஆனால் இதில் உள்ள மற்றொரு சிக்கல் என்னவெனில், நெப்டியூன் ஒரு வாயு கிரகம். அங்கு மனிதர்களால் வசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage