கடல் போல் தென் மதுரை வைகை நதி.. வருண பகவான் கருணையால் நீர்மட்டம் கிடுகிடு! கோடையில் இல்லை பிரச்சினை!

post-img
தேனி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, இரண்டே நாளில் 10 அடி அளவிற்கு வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், விரைவில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்கின்றனர் அதிகாரிகள். இதனால் வரும் கோடையில் 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கு பிரச்சினை இருக்காது! தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று கடற்கரையை நெருங்கியதால் கனமழை பெய்தது. குறிப்பாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர் கனமழை பெய்தது. மேலும் நேற்று பகல் நேரத்திலும் விட்டுவிட்டு அவ்வப்போது பலத்த கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. குறிப்பாக நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பத்து அடி வரை உயர்ந்துள்ளது வைகை அணை நீர்மட்டம். மொத்த உயரமான 71 அடியில் 60 அடியை நெருங்கி இருக்கும் நிலையில் வைகை அணையில், அணைக்கான நீர்வரத்து மற்றும் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் தேனி மாவட்ட மழை பாதிப்பு கண்காணிப்பாளர் லில்லி , வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் நிலவரம் குறித்தும், முழுமையாக நிரம்புவது குறித்தும், பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்தும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஏற்கனவே கேரளாவில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இதே அளவு மழை நீடித்தால் வைகை அணையும் விரைவில் நிரம்பும் என்கின்றனர் அதிகாரிகள். இதனால் 5 தென் மாவட்டங்களில் வரும் கோடையில் குடிநீருக்கு பஞ்சமிருக்காது எனவும் கூறுகின்றனர். காரணம் தேனியில் உற்பத்தியாகும் வைகை ஆறு ஐந்து மாவட்ட மக்களின் பாசன மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. மூல வைகை ஆற்றோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சிறு ஓடைகளும் நதிகளும் இணைகின்றன. இதன் மூலம் மேற்கண்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறுவதோடு, கோடையில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் வைகை ஆறு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Post