சூட்கேஷை திறந்து பார்த்தால் அதிர்ச்சி.. கட்டக்கட்டாக இருந்த காகித நோட்டு.. கோவை பெண்களிடம் பலே மோசடி

post-img

கோவை: வட்டியில்லாமல் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு, கட்டுக் கட்டாக போலி நோட்டுகளை கொடுத்து மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் மோசடி செய்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அன்பழகன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவகர் சுகந்தி. இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்தி வருபவர். இவர், கடன் தொடர்பாக பெண்களுக்கு ஆலோசனை மற்றும் வங்கிகளில் பணம் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சுகந்திக்கு செலக்கரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த விஜயா மற்றும் அன்பழகன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

அப்போது, அன்பழகன் தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், ஊனமுற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கினால் வெளிநாட்டில் இருந்து வட்டியே இல்லாமல் கடன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கோடிக் கணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் தருகின்றனர். அதை நாங்கள் உங்களுக்குப் பெற்றுத் தருகிறேன் என்று கூறி சுகந்தியை நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், சுகந்தி மற்றும் அவரது மகளிர் சுய உதவிக் குழுவைத் சேர்ந்த 28 பெண்களைச் சந்தித்து உங்களுக்கு வட்டி இல்லாமல் 6 1/4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. எனவே, நீங்கள் 28 பேரும் தலா 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் இந்த 6 1/4 கோடியில் பங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி அவர்களை நம்ப வைத்துள்ளனர்.
இதனை நம்பிய 28 பேரும் தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதில், இரண்டு பெண்கள் பணத்தை தயார் செய்துவிட்டு அன்பழகன், விஜயா ஆகியோரை சந்தித்து கடந்த வாரத்தில் கொடுத்துள்ளனர். இந்நிலையில், விஜயா மற்றும் அன்பழகன் அப்பெண்களிடம் சூட்கேஷ் ஒன்றை கொடுத்துள்ளனர். உங்களுக்கு கொடுக்க வேண்டிய 6 1/4 கோடி ரூபாய் இதில் உள்ளது. இந்தப் பணத்தை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

மற்ற பெண்கள் பணம் கொடுத்த பின்னர் இந்த கோடி ரூபாயைப் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த இரண்டு பெண்களும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களை அழைத்து அந்தப் பெட்டியை சாவியைக் கொண்டு திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அந்தப் பெட்டிக்குள் பணத்துக்குப் பதிலாக கட்டுக்கட்டாக காகித நோட்டுகள் இருந்துள்ளன. அப்போதுதான் விஜயா, அன்பழகன் ஆகியோர் தங்களை ஏமாற்றிது குறித்து மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு தெரியவந்துள்ளது. ஏமாற்றமடைந்த அப்பெண்கள் உடனடியாக சூலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
புகாரின்பேரில், பட்டணம் பகுதிக்கு வந்த போலீஸார் மோசடி செய்த அன்பழகனை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய விஜயா தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Post