சென்னை: , சிறு விவசாயிகளுக்கு, வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்க வசதியாக 1,000 கோடி ரூபாயில் கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு துவங்கியிருக்கிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க வங்கிகள் காட்டும் தயக்கத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நம்முடைய விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்காகவும், ஏராளமான திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசு: குறிப்பாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) அதாவது பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது.
அதேபோல, விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம்கூட, தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டம், புதுமைத் திட்டம் மற்றும் காகிதக் குறைவான பேனா அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.. அதன்படி, இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்துக்காக ரூ. 2,481 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகள்: இப்படிப்பட்ட சூழலில் மற்றொரு மகிழ்ச்சி செய்தியை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.. அதன்படி, சிறு விவசாயிகளுக்கு, வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்க வசதியாக 1,000 கோடி ரூபாயில் கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு துவங்கியிருக்கிறது. டெல்லியில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்..
இந்த திட்டத்தின்படி, அறுவடைக்கு பிறகு தானியங்களை இருப்பு வைத்ததற்கான கிடங்கின் மின்னணு ரசீதை வைத்துள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகள், அந்த ரசீதைக் காட்டினால், கடன் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
நெருக்கடி: அறுவடை செய்யும் சிறு விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காத சூழல் இருந்தாலும்கூட, அடுத்த போகம் பயிரிட வேண்டியிருப்பதால், நஷ்டத்தில் தங்கள் விளைபொருளை விற்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. இதுபோன்றவர்கள், தங்கள் விளைபொருளை கிடங்குகளில் இருப்பு வைத்து, அதற்கான ரசீதைக் காட்டினால், அடுத்த போகம் பயிரிட, அவர்களான் கடன் பெற முடியும்.
தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும்போது, கிடங்கில் உள்ள அவற்றை விற்பனை செய்து, தங்களது நஷ்டத்தையும் தவிர்க்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, கிடங்கு ரசீதை வங்கிகள் பிணையாகக் கருதி, விவசாயிகளுக்கு தயக்கமின்றி கடன் வழங்க, முன்வர இந்த திட்டம் உதவும் என்றும் இதற்காகவே வங்கிகளுக்கு 1,000 கோடி ரூபாய் நிதியில் இருந்து கடன் உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கும் என்றும் தெரிகிறது.
சபாஷ் திட்டம்: விவசாயிகள் இந்த கடனை பெறுவதற்கு, முதலில், விற்க முடியாத விளைபொருளை கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும்.. பிறகு இதற்கான மின்னணு ரசீதை பெற வேண்டும்.. இந்த ரசீதை காட்டினால்தான் வங்கிகள் கடன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.