சர்வதேச அளவில் விளையாட்டில் புகழ்பெற்ற இந்திய ஜாம்பவான்கள் என்றால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் என்று சிறிய பட்டியலில் தான் உள்ளது. அந்த பட்டியலில் 25 வயதிலேயே இணைந்திருக்கிறார் இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ரா. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா.
அதே ஆண்டில் காமன்வெல்த் கேம்ஸ், 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம், 2022ஆம் ஆண்டு டைமண்ட் லீக் சாம்பியன், தற்போது உலக தடகள சாம்பியன் பட்டம் என்று தடகளத்தின் அத்தனை உச்சங்களையும் 25 வயதில் எட்டி சாதனை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இனி தடகளம் என்றாலே நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லவில்லையா என்ற கேள்வி ரசிகர்களுக்கு நிச்சயம் எழும். அதேபோல் சர்வதேச அளவில் ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு நீரஜ் சோப்ரா சர்வதேச தடகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நீரஜ் சோப்ராவின் ஆட்டத்தை பார்த்து ஹங்கேரியை சேர்ந்த ரசிகை ஒருவர் ஆட்டோகிராஃப் பெற்று சென்றுள்ளார். இந்த வெற்றிக்கு பின் நீரஜ் சோப்ரா பேசுகையில், இந்திய ரசிகர்களுக்கு நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பதக்கம் மொத்த இந்தியாவுக்குமானது. ஒலிம்பிக் சாம்பியனாக இருந்த நான், இப்போது உலக சாம்பியனான மாறி இருக்கிறேன்.
அனைவரும் அனைத்து துறைகளிலும் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும். இந்த உலகில் அனைவரும் தங்களுக்கென்று ஒரு பெயரை சம்பாதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து 25 வயதிலேயே அனைத்தையும் சாதித்துவிட்டீர்கள், அடுத்தப் போட்டிக்கு எப்படி ஊக்கம் பெறுகிறீர்கள்? எது உங்களுக்கு வெற்றியை நோக்கி உந்தி செல்கிறது என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஈட்டி எறிவோருக்கு என்றுமே இறுதிக் கோடு என்பதே கிடையாது என்று தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் இந்த பதில் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.