கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை திருடிய மற்றொரு பெண்ணை கையும்- களவுமாக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள். நேற்று காலை நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் என்ன நடந்தது. டிப்-டாப் உடை அணிந்தபடி நின்ற பெண், கைவரிசை காட்டி மாட்டிக்கொண்டது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நேற்று காலை சுமார் 11 மணி அளவில், மேல்மிடாலம் நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தனது கழுத்தில் ஐந்து பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார். அந்த நகையை அவருக்கு பின்னால் டிப்-டாப் உடை அணிந்தபடி நின்ற மற்றொரு பெண் நைசாக திருடியிருக்கிறார்.
பஸ்சில் கூட்டமாக இருந்ததால் நகை திருடப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் நகை திருடியதை அருகில் இருந்த சக பயணிகள் உடனே பார்த்து விட்டனர். இதைத்தொடர்ந்து நகை திருடிய பெண்ணை கையும்- களவுமாக பயணிகள் பிடித்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண் பயணிகள் பிடியில் இருந்து தப்பித்து ஓடினார். அவரை பயணிகள் துரத்தி சென்று பிடித்து மீண்டும் பேருந்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்கள். தங்க நகை கிடைத்த மகிழ்ச்சியில் நகையின் உரிமையாளர் அடுத்த நொடியே பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். ஆனால் அவரிடம் நகையை பறித்த பெண்ணை பயணிகள் விடவில்லை. பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணை பயணிகள் கண்டித்தார்கள்.
ஆனால் நகையை பறித்த பெண் அதை கண்டுகொள்ளாமல் திமிராக பேசியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீஸ் வர தாமதமானது. முதலில் ரோந்து பிரிவு போலீசார் வந்தனர். அவ்வாறு வந்த போலீசார் நடந்த விவரத்தை ஆசாரிபள்ளம் போலீசில் தெரிவித்து நகை திருடிய பெண்ணை அழைத்துச் செல்ல வருமாறு கூறினார்கள். ஆனால் பார்வதிபுரம் பாலம் நேசமணிநகர் போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்று ஆசாரிபள்ளம் போலீசார் கூறினார்கள்.
இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் அங்கு வந்தார். அப்போது நகை திருடிய பெண்ணை போலீசிடம் பயணிகள் ஒப்படைத்தார்கள். பின்னர் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.