சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பொதுக்குழுவையொட்டி சென்னை வானகரம் பகுதி கரகாட்டம், தப்பாட்டம் போன்றவற்றால் களைகட்டியுள்ளது. அப்போது எம்ஜிஆர் போல் வேடமிட்ட கலைஞர்களும், அங்கு வந்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முன்பு அப்படியே எம்ஜிஆர் போல் ஆடிப்பாடி பேசியது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதாலும் அதிமுகவின் இந்த பொதுக்குழு அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பொதுக்குழுவில் 17 தீர்மானங்களும், செயற்குழுவில் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிமுக பொதுக்குழு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காலையில் இருந்தே சென்னை வானகரத்துக்கு வர தொடங்கினர். மேலும் வானகரத்தில் இருந்து ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபம் வரை கட் அவுட், பேனர்கள், அதிமுக கொடி, போஸ்டர்கள் என அந்த இடம் முழுவதும் நிரம்பியிருந்தன. அதிமுக பொதுக்குழு - செயற்குழு கூட்டம் ஜெயலலிதா காலத்தில் இருந்தே இதே மண்டபத்தில் நடைபெற்று வருவதால், இந்த முறையும் வரவேற்பு பேனர்கள், கொடி, தோரணம் என வானகரம் பகுதி முழுவதும் களைகட்டியுள்ளது.
மேலும் மண்டபத்துக்கு வரும் நுழைவு பகுதியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் கட் அவுட்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி எடப்பாடி என்று முழக்கமிட்டபடி வந்தனர். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என்றும், எடப்பாடி தான் நாளைய முதல்வர் என்றும் தொண்டர்கள் கூறியபடியே வந்தனர்.
மண்டபத்துக்கு முன்பாக தாரை தப்பட்ட மேள தாளங்கள் முழங்கிக்கொண்டு இருக்க, பொய்க்கால் ஆட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் போன்றவையும் களை கட்டின. அப்போது எம்ஜிஆர் வேடமிட்டு கலைஞர்களும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் எம்ஜிஆர் போல் பாட்டு பாடி, வசனங்கள் பேசி தொண்டர்களை மகிழ்வித்தனர். எம்ஜிஆர் ஸ்டைலில் பேசியது, ஆடியது அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றி தொண்டர்கள் கூறுகையில், "சிறப்பாக நடந்து வருகிறது. எம்ஜிஆர், அம்மாவின் ஆன்மா எடப்பாடியை வழிநடத்திக்கொண்டு இருக்கிறது. 2026 இல் எடப்பாடி ஆட்சி தான். விமர்சனங்கள் எல்லா இடத்திலும் இருக்கிறது. இதையெல்லாம் முறியடித்து தான் வெற்றி பெறுவோம்" என்று அவர்கள் கூறினர். பொதுக்குழுவில் பங்கேற்க வரும் கட்சி நிர்வாகிகளுக்கு மதிய உணவு விருந்து வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று 20 சைவ உணவுகளும், 8 வகையான அசைவ உணவுகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக 8 ஆயிரம் பேருக்கு சைவ உணவும், 2 ஆயிரம் பேருக்கு அசைவ உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.