சென்னை: சீமானும் விஜயலட்சுமியும் சமாதானமானது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான், இயக்குநராக இருந்த போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டார் என விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
மேலும் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை 2013 இல் திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தான் 7 முறை கருத்தரித்ததாகவும் அதை சீமான் கட்டாயப்படுத்தி கலைத்துவிட்டார் என்றும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சீமானை கைது செய்ய வேண்டும் என கோரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விஜயலட்சுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த வளசரவாக்கம் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ள போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் வீரலட்சுமிக்கு நாம் தமிழர் கட்சியினர் தினமும் 100 பேராவது போன் செய்து ஆபாசமாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார். இதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டு கோயம்பேடு துணை கமிஷனரிடம் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்தார்.
சீமான் விஜயலட்சுமிக்கு உணவில் மருந்து கொடுத்து கருச்சிதைவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் சீமான் தனக்கு சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் விஜயலட்சுமி, வீரலட்சுமியும் ஆஜராக வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த வீரலட்சுமி, நாங்கள் வரோம், நீங்கள் கயல்விழியுடன் வரத் தயாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
சீமானை ஸ்கெட் போட்டு தூக்க எனக்கு எவ்ளோ நேரம் ஆகும் என்றும் கேட்டிருந்தார். இதற்கு சீமான் கடுமையான விமர்சனங்களை அளித்திருந்தார். சீமான்" நான் பெரிய ரவுடி, பிரச்சினை செய்தால் கட்சியாவது மண்ணாவதுனு வெட்டிட்டு போய்ட்டே இருப்பேன், வீரலட்சுமி யாரு , எதற்காக என் விஷயத்தில் தலையிடுறாங்க, கயல்விழி வரமாம்ல்ல, அவர் என் மனைவி மட்டுமில்ல, ஒரு வழக்கறிஞரும் கூட , என்னை என்ன யாருமில்லாத வெறும்பயனு நெனச்சீங்களா என ஒருமையில் கடுமையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் வளசரவாக்கத்தில் சீமான் ஆஜராக இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு ட்விஸ்ட் நடந்தது. சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனுவை வாபஸ் பெற்றார். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இதற்காக நான் பணமும் வாங்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார். வீரலட்சுமியின் உறவினர் வீட்டில் இருந்த விஜயலட்சுமி அவருடைய அக்கா உஷா வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வீரலட்சுமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனது மகிழ்ச்சி. இவர்கள் விவகாரத்தை கையில் எடுத்து சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தீர்வு காண முயற்சித்தேன்.
விஜயலட்சுமி விவகாரம் இத்துடன் நிரந்தரமாக முடிவு வந்துவிட்டது. சீமான்- விஜயலட்சுமி சமாதானமானதால் வேண்டுதலை நிறைவேற்ற இன்று 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார் வீரலட்சுமி.