டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை (டிசம்பர் 11 திங்கள்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.
நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டை குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவும் உருவாக்கப்பட்டது. ஆனால் 1950களில் இருந்தே இந்த 370-வது பிரிவுக்கு எதிரான குரல்களும் ஒலித்து வந்தன.
இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய பாஜக அரசால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் முற்றாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்தனர். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்தனர். 370-வது பிரிவு ரத்துக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னைக்கு போங்க! தமிழ்நாட்டிற்கு மோடி அனுப்பும் முக்கிய டீம்! அடித்து ஆடும் டெல்லி! ரொம்ப முக்கியம்
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 28: 370-வது பிரிவுக்கு எதிரான வழக்குகளை முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்ச், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு பரிந்துரைத்தது.
2019-ம் ஆண்டு அக்டோபர் 1: 370-வது பிரிவை விசாரிக்க நீதிபதிகள் என்.வி.ரமணா, எஸ்கே கவுல், ஆர். சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ஜூலை 3: தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
2023-ம் ஆண்டு ஜூலை 11: 370-வது பிரிவுக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதான விசாரணையும் ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் தொடங்கும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது.
2023-ம் ஆண்டு ஆகஸ் 2 : 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
2023-ம் ஆண்டு செப்டம்பர் 5: மொத்தம் 16 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு டிசம்பர் 8: 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
370-வது பிரிவு வழக்கின் மனுதாரர்கள்: மனோகர் லால் சர்மா, வி த சிட்டிசன்ஸ், டாக்டர் சாரு வாலி கண்ணா, முகமது அக்பர் லோன, ஹஸ்னாயின் மசூதி, ஷாகீர் ஷபீர், அனுராதா பாஷின்.
மனுதாரர்களின் வழக்கறிஞர்கள்: ராஜூ ராமச்சந்திரன், கோபால் சங்கரநாராயணன், எம்.எல்.சர்மா, ஷாகீர் ஷபீர்