சென்னை: ராகு கேது பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கும் யோகங்கள் கிடைக்குமா? சோகங்கள் நீங்குமா என்று பார்க்கலாம்.
ராகு கேது: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.
கடகம்: ராகு பகவான் கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு யோக காரகன். குரு பகவான் வீட்டில் ராகு பகவான் அமர்கிறார். மீன ராசியில் சுக்கிரன் உச்சமடையும் வீடு. அந்த வீட்டில் ராகு பகவான் அமர்வது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பு. ராகு பகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு வரப்போகிறார். உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி தைரிய ஸ்தானத்தில் அமரப்போவது அற்புதமான யோகத்தை கொடுக்கும். சர்ப்ப கிரகங்களின் இடப்பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது.
பதவி உயர்வு வரும்: பொதுவாகவே, ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகள் நல்ல அம்சம்தான். ராகு 9ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குருவின் வீடு சுக்கிரன் உச்சமடையும் வீடு என்பது நன்மையை செய்யும். உதவிகள் தேடி வரும். ஆசைகள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடகம் அஷ்டம சனி என்றாலும் கவலைப்பட வேண்டாம். கடனால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும். பண வருமானம் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும். உதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டகரமான கால கட்டம். கேட்ட இடத்தில் உதவிகள் தேடி வரும். கேட்கமாலேயே உதவிகள் வீடு தேடி வரும். பதவி, மரியாதை தேடி வரும்
சுப காரியங்கள்: இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென முடியும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். தந்தையார் சொத்துக்கு சகோதரிகள் உரிமை கொண்டாடுவார்கள். ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு மாறும் ராகுவினால் படபடப்பு குறையும். தள்ளிப்போன பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். சிலருக்கு பெரிய நிறுவனங்களில் தகுதி திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.
பிரச்சினை நீங்கும்: கடன் பிரச்சினை நீங்கும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவியோடு பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த மேற்படிப்பை தொடர்வீர்கள். அம்மா உடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
கேது செய்யும் நன்மை: கேது மூன்றாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பெண்களுக்கு மன உளைச்சல்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நோய்களும், வலிகளும் நீங்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கவோ, தொழிலில் அதிக முதலீடு செய்து அகலக்கால் வைக்கவோ வேண்டாம் ஆபத்தாகி விடும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி: மூன்றாம் வீடான தைரியம், வீரியம், முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வது நன்மை தரும் அமைப்பாகும். சங்கடங்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். அதே நேரத்தில் ராசிக்கு ஒன்பதாம் இடமான தகப்பன் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு தனுசுவில் உள்ள சனியின் சனி பார்வை பெறுவதால் அப்பாவின் உடல் நிலை பாதிக்கலாம். யோக தசைகள் நடந்தால் தலைக்கு வரும் ஆபத்து தலை பாகையோடு போய்விடும்.
நினைத்தது நிறைவேறும்: நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். மனைவிக்கு தங்க நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள்.
சொந்த வீடு யோகம்: புது வீடு, நிலம் வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது. வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மாடி வீடு கட்டி குடியேறுவீர்கள். சகோதரர்களிடம் வீண் பிரச்னைகள் வேண்டாம். அவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பூர்வீக சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். இந்த ராகு கேது விடிவையும் விமோசனத்தை தந்து பண வருமானத்தையும் சேமிப்பையும் கொடுக்கப் போகிறார்.
பரிகாரம் என்ன: உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கஷ்டங்களை அனுபவித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மனதிற்கு சற்றே ஆறுதலை தரப்போகிறது. வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். பங்குச்சந்தையில் முதலீடுகள் செய்யாதீர்கள். பெரிய அளவில் அகலக்கால் வைக்காதீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி புதிய மாற்றங்களைத் தரப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியினால் மேலும் நன்மைகள் நடைபெற விநாயகப்பெருமானுக்கு புதன்கிழமையும் அனுமனுக்கு வியாழக்கிழமையும் வெற்றிலை மாலை சாற்றி வணங்கலாம். குல தெய்வ பிரார்த்தனை கோடி நன்மையை தரும். அஷ்டமத்து சனியால் கஷ்டங்கள் பிரச்சினைகள் தேடி வந்தாலும் ராகு கேது உங்களுக்கு கை கொடுக்கும்.