டெல்லி: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் விவாகரத்து கேட்ட நிலையில் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. மேலும் விவாகரத்து ஏன் வழங்க முடியாது என்பது தொடர்பாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா. இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். உமர் அப்துல்லாவின் மனைவி பெயர் பாயல் அப்துல்லா. இவர்களின் திருமணம் என்பது கடந்த 1994ம் ஆண்டு நடந்தது.
இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தான் கருத்து வேறுபாட்டால் இந்த தம்பதி கடந்த 2007 ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகன்கள் 2 பேரும் உமர் அப்துல்லாவின் மனைவி பாயல் அப்துல்லாவிடம் உள்ளனர்.
இந்நிலையில் தான் பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து பெற உமர் அப்துல்லா முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. திருமண முறிவு, குடும்ப பிரச்சனையை நிரூபிக்க அவர் தவறிவிட்டதாக கூறி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதனால் உமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. இதனால் உமர் அப்துல்லா-பாயல் அப்துல்லா தம்பதி தொடர்ந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த தம்பதி விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது மனைவி பாயல் அப்துல்லாவின் பராமரிப்புக்கு மாதம் ரூ.1.50 லட்சமும், 2 மகன்களின் படிப்பு செலவுக்காக மாதம் ரூ.60 ஆயிரமும் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே தான் உமர் அப்துல்லா தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவகாரத்து கோரியும், குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்தும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு என்பது இன்று நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உமர் அப்துல்லாவின் மனுவை தள்ளுபடி செய்தனர். அதோடு விவாகரத்து வழங்க மறுத்த குடும்பநல நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த விசாரணையின்போது ‛‛குடும்ப பிரச்சனை தொடர்பாக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும், தெளிவற்ற நிலையிலும் உள்ளது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தலை அனுபவித்ததாக மனுதாரர் கூறிய நிலையில் அதனை நிரூபிக்க தவறியுள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது. இதனால் குடும்பநல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எந்த குறைபாட்டையும் எங்களால் காண முடியவில்லை. இதனால் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்'' என கூறினர்.
Weather Data Source: Wettervorhersage 21 tage