சென்னை: சென்னை ஐஐடியில் படித்த மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ 4.30 கோடி சம்பளத்தில் அமெரிக்காவில் வேலை கிடைத்துள்ளது. இத்தனை கோடி சம்பளத்தில் வேலை என்பது சென்னை ஐஐடி பிளேஸ்மென்ட் வரலாற்றில் முதல் முறையாகும்.
பிளஸ் 2 முடித்தவுடன் ஏனோதானோ என இல்லாமல் ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் அதிக உழைப்பை போடுகிறார்கள். இதில் முக்கியமானது என்றால் படித்து முடித்தவுடன் கைநிறைய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான்!
அதாவது எந்த கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்கிறது என பார்க்கும் மாணவர்கள், அதன் பிறகு பார்ப்பது அங்கு கற்பிக்கும் முறை, பேராசிரியர்களின் திறன். இது எல்லாவற்றையும் விட கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும் வளாக நேர்காணல்தான் முக்கியம்.
அதாவது ஒரு சில கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படுகிறது. அதாவது பிரபல நிறுவனங்களான விப்ரோ, எச்சிஎல், எல் அன்ட் டி, டெல், ஹூண்டாய், செயின்ட் கோபைன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தங்களுக்கான ஊழியரை தேர்வு செய்கின்றன.
அதாவது பொறியியல் கல்லூரி என்றால் 3-ஆம் ஆண்டு படிக்கும் போது அல்லது 4 அல்லது 5 ஆவது செமஸ்டர் தேர்வுகள் முடிந்ததும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்படும். இதில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு அப்போதே அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்கப்படுகிறது.
அவர் கல்லூரி படிப்பை நிறைவு செய்ததும் கம்பெனியில் போய் அந்த ஆர்டரை காண்பித்து வேலையில் சேர்ந்து கொள்ளலாம். இந்த வளாக நேர்காணல் என்பது எல்லா மாணவர்களும் கலந்து கொள்ள முடியுமா என்றால் இல்லை! ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும் தோல்வியடையாமல் இத்தனை சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
சில கல்லூரிகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் நேர்காணலை நடத்துகின்றன. அதாவது சென்னை ஐஐடி உள்ளிட்ட கல்லூரிகளில் வெளிநாட்டு நிறுவனங்களான மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், அமேசான், உள்ளிட்ட நிறுவனங்களும் நேர்காணலை நடத்துகின்றன.
அதாவது மாணவர்களின் துறைக்கேற்ப அந்தந்த நிறுவனங்கள் கலந்து கொள்ளும். மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் கம்பெனிகளுக்கு வருவார்கள். டெல்லி, மும்பை, சென்னை, கான்பூர், ரூர்க்கி, கவுஹாத்தி, காரக்பூர் உள்ளிட்ட பல்வேறு ஐஐடிகளில் இந்த வளாக நேர்காணல் நடத்தப்பட்டது.
அந்த வகையில் சென்னை ஐஐடியில் குளோபல் டிரேடிங் நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் என்ற நிறுவனம் வளாக நேர்காணலை நடத்தியது. இதில் 2025 ஆம் ஆண்டு பேட்ச் மாணவருக்கு ஆண்டுக்கு ரூ 4.3 கோடி ஊதியத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. அதாவது மாதத்திற்கு 35 லட்ச ரூபாயாகும். இது தவிர போனஸ், அந்த மாணவர் அமெரிக்கா செல்வதற்கான அனைத்து செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்றது.
சென்னை ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் மாணவருக்குத்தான் இந்த வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு ஹாங்காங்கை சேர்ந்த டிரேடிங் நிறுவனமும் வேலை வாய்ப்பை கொடுத்துள்ளது. இந்த இரண்டில் அவர் எதை தேர்வு செய்ய போகிறார் என தெரியவில்லை. இதுவரை ஆண்டுக்கு ரூ 1 கோடி, 2 கோடி வரை மட்டுமே ஆட்கள் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் சென்னை ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக ரூ 4.3 கோடி ஊதியத்தில் மாணவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. எனினும் அந்த மாணவரின் பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Weather Data Source: Wettervorhersage 21 tage