டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எனவே அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இன்று காங்கிரஸ் கட்சி நாடு முழவதும் போராட்டங்களை நடத்துகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு செவி கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக அதானி விஷயத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்த போது, அவையை ஒத்துவைத்து அதற்கு மத்திய அரசு தனது பாணியில் பதிலளித்ததாக காங்கிரஸ் எம்பிக்கள் விமர்சித்துள்ளனர்.
"நாங்கள் முதல் நாள்தான் இந்த பிரச்னையை எழுப்பினோம். அவர்கள் அவையை ஒத்திவைத்துவிட்டார்கள். இரண்டாவது நாள் நாங்கள் எழுந்து நின்றோம், உடனே அவையை ஒத்திவைத்துவிட்டார்கள். மூன்றாவது நாள் நாங்கள் பேச முயன்றோம் உடனே அவையை ஒத்திவைத்துவிட்டார்கள். உண்மையில் அவர்கள்தான் அவையை ஒத்தி வைக்கிறார்கள். இதற்கு நாங்கள் காரணமல்ல" என்று காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டியிருந்தன.
இப்படி இருக்கையில், அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதை போல மாறியிருக்கிறது. அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கிறது.