சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே.. தமிழக பகுதியில் எப்போது திறக்கப்படும்! நிதின் கட்கரி மேஜர் தகவல்

post-img

சென்னை: சென்னை பெங்களூரை இணைக்கும் வகையில் இப்போது புதிய எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் நடந்து வருகிறது. இதற்கிடையே இதன் தமிழ்நாடு பகுதி கட்டுமானம் எப்படி இருக்கிறது.. அது எப்போது நிறைவடைந்து சாலை முழுமையாகத் திறக்கப்படும் என்பது குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்
தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் வகையிலான எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதில் கர்நாடகா பகுதியில் கட்டுமானம் நிறைவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதேநேரம் தமிழ்நாடு பகுதியில் கட்டுமானம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கட்டுமானம்: இதற்கிடையே சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வேயின் தமிழ்நாடு பகுதி குறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது சென்னை- பெங்களூர் விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
எப்போது நிறைவடையும்: நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, "இந்த எக்ஸ்பிரஸ் வே திட்டம் 261.70 கிமீ நீளம் கொண்டதாகும். அதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7,525 கோடி செலவில் 105.70 கிமீ நீளத்திற்கு விரைவுச் சாலைத் திட்டம் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்றார். மேலும், அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இதன் பணிகள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த எக்ஸ்பிரஸ் வே கட்டுமானம் மொத்தம் நான்கு தொகுப்புகளாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிரச் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையை (NH-48) எக்ஸ்பிரஸ் வே உடன் இணைக்கும் வகையில் இருங்காட்டுக்கோட்டையில் ஒரு இன்டர்சேஞ்ச் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பகுதி என்பது ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திரப் பிரதேசத்தில் குடிபாலாவில் முடிவடைகிறது.
எங்கே எவ்வளவு சதவிகிதம்: அதில் குடிப்பாலா முதல் வாலாஜாபேட்டை வரையிலான 24 கிமீ நீளத் தொகுப்பில் 72% கட்டுமானத்தைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடித்துள்ளது. அதேபோல வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.5 கிமீ நீளத்தில் 86 சதவீதமும் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான 25.5 கிமீ நீளச் சாலையில் 52 சதவீதமும் கட்டுமானம் முடிந்துள்ளது. கடைசிக் கட்டமான காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 32.1 கிமீ நீளம் சாலையில் 65 சதவீத கட்டுமானம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆந்திராவின் குடிபாலா முதல் வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம் மற்றும் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான பகுதிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். அதேநேரம் கடைசிக் கட்டமான காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான சாலை மட்டும் அடுத்தாண்டு ஜூலை மாதம் தான் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம்: அதேநேரம் நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலையை இணைக்கும் இன்ரட்சேஞ்சின் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் தொடங்கப்பட்டது. அதன் கட்டுமானம் இப்போது 15% வரை முடிந்துள்ளது. இது முழுமையாக முடிய அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "நிலம் கையகப்படுத்துதல், கடனுக்கான ஒப்புதல்கள், இந்த பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை மாற்றுவது உள்ளிட்டவற்றில் இருந்த பிரச்சினைகள் காரணமாக ஆரம்பத்தில் சில சிக்கல் ஏற்பட்டன. ஆனால், அவை எல்லாம் முடிந்த பிறகு இப்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் கட்டுமானம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து விரைவில் சாலை போக்குவரத்துக்குத் திறக்கப்படும்" என்றார்.

Related Post