உஷாரு உஷாரு.. தவெக உஷாரு.. விஜயை விமர்சித்து பாடல் பாடிய பாடகர் கோவன்.. கொந்தளிக்கும் தவெகவினர்

post-img
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையை விமர்சனம் செய்து நாட்டுப்புற பாடகர் கோவன் பாடிய பாடல் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட தவெகவுக்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட கட்சியினர் அந்த பாடல் வீடியோவை இணையதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ம் தேதி சர்வதேச மனித உரிமை நாள் என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்கும் வகையிலும், மனித உரிமைகளை காக்கும் நோக்கத்திலும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சர்வதேசமனித உரிமை நாள் கருத்தரங்கம் ஒன்றில் நாட்டுப்புற பாடகர் கோவன் பாடிய பாடல் வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பாடல் மூலம் பாடகர் கோவன், நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் விஜய் நடித்த படத்தின் பெயரையும், நடிகர் விஜயையும் ஒப்பிட்டு அவர் விளாசியுள்ளார். இது தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் கோவனின் இந்த பாடல் வீடியோவை திமுக மற்றும் தவெகவுக்கு எதிரானவர்கள் வலைதளங்களில் பரப்பி வருகின்றன. அந்த வீடியோவில் கோவன் சிவப்பு நிற சட்டை, சிவப்பு நிற தலைப்பாகை அணிந்து பாடுகிறார். அந்த பாடலில் இடம்பெற்ற சில முக்கிய வரிகள் வருமாறு: தொட்டபெட்டா ரோட்டுல முட்டை பரோட்டா தின்னாரு ரஞ்சிதமே ரஞ்சிதமே குத்தாட்டம் போட்டாரு திராவிட கொள்கை பேசி நடித்தாரு எம்ஜிஆரு ஓஓ திராவிட கொள்கை பேசி நடித்தாரு எம்ஜிஆரு தளபதி படத்துல எந்த கொள்கையை உதிர்த்தாரு அனிதா இறந்தபோது எங்க போனீங்க சிவகாசி நீட் தேர்வு எடுத்தபோது என்ன செஞ்சிங்க பகவதி ஸ்டெர்லைட் போராட்டம் எங்க போனீங்க துப்பாக்கி டெல்லி போராட்டம் தெரியுமாங்க பக்கீரி அட முதல்வர் கனவு கடக்கட்டும் உங்க முதுகை பாருங்க போக்கிரி உஷாரு உஷாரு தவெக உஷாரு உஷாரு உஷாரு தவெக உஷாரு என்று பாடல் வரிகள் அமைந்துள்ளது. இந்த பாடல் தான் தவெகவினரை கோபப்படுத்தி உள்ளது. இந்த பாடலை பாடியுள்ள கோவன் நாட்டுப்புற பாடகர், சமூக செயற்பாட்டாளராக அறியப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இதற்கு முன்பு 2015 காலக்கட்டத்தில் மதுவிலக்கு போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது ‛மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் பாடி அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து பாடகர் கோவன் தேசத்துரோக சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது நடிகர் கோவனுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். ஜெயலலிதாவை விமர்சித்து பாடல் பாடியவர் மீது தேசத்துரோக வழக்கு போடுவது நியாயமா? என பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும் கோவன் கண்டுக்கொள்வது இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் அதிகமானவர்கள் பலியானபோது கோவன் எங்கு சென்றார் என்று பலரும் வலைதளங்களில் கேள்வி கேட்டனர். அதோடு கோவன் திமுகவின் ஆதரவாளர். இதனால் தான் அவர் தற்போது கள்ளச்சாராய பலியை கண்டுக்காமல் உள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் ஒரு பாடல் பாடி வெளியிட்டார். அதில் திமுகவின் திட்டங்களை பல இடங்களில் புகழ்ந்தும், பாஜகவை விமர்சனம் செய்தும், இடையிடையே டாஸ்மாக்கை மூட முடியுமா? என்று சில வரிகளும் இடம்பெற்று இருந்தது. இத்தகைய சூழலில் தற்போது நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் வருகையை எதிர்த்து தனது பாணியில் நாட்டுப்புற பாடகர் கோவன் விமர்சனம் செய்து பாட்டு பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post