பெங்களூர்: கர்நாடகவில் பெண் அமைச்சரை அவதூறாகப் பேசிய வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு குருவாக அறியப்படும் கர்நாடகா பாஜக எம்எல்சி சிடி ரவியை போலீசார் கர்நாடகா சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்துள்ள நிலையில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டும் போட்டோ வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இங்கு சட்டசபை, சட்ட மேலவை என்று 2 அவைகள் உள்ளன. சட்டசபையில் எம்எல்ஏக்களும், சட்ட மேலவையில் எம்எல்சிக்களும் இருப்பார்கள்.
அதேபோல் கர்நாடகாவில் 2 சட்டசபை கட்டடம் உள்ளது. ஒன்று பெங்களூரில் உள்ள விதான சவுதா. இன்னொன்று பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதா. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் பெங்களூர் விதான சவுதாவிலும், ஆண்டின் கடைசியில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவிலும் நடக்கும்.
அந்த வகையில் தற்போது கர்நாடகாவில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால் சட்டசபை, சட்ட மேலவை கூட்டங்கள் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் நேற்று கர்நாடகா சட்டசபை, சட்டமமேலவையில் எதிரொலித்தது.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அம்பேத்கர் போட்டோவை வைத்து கோஷமிட்ட நிலையில் பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கர்நாடகா மேலவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கும், கர்நாடகா பாஜக எம்எல்சி சிடி ரவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது லட்சுமி ஹெப்பால்கரை அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து லட்சுமி ஹெப்பால்கர் அழுதபடி வெளியேறிய நிலையில் மேலவை தலைவர் மற்றும் கானாப்புரா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிடி ரவியை கைது செய்தனர். சுவர்ண சவுதா வளாகத்தில் இருந்தே போலீசார் சிடி ரவியை குண்டுக்கட்டாக இழுத்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்த வேளையில் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை தாக்க முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் தற்போது சிடி ரவியின் தலையில் இருந்து ரத்தம் வடிந்த போட்டோ வெளியாகி உள்ளது. இதனை சிடி ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது போலீசார் அவரை கைது செய்து இழுத்து சென்றபோது அவரது தலையில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவருக்கு தலையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. அதன்பிறகு இன்று அதிகாலையில் போலீசார் சிடி ரவியை ராமதுர்கா தாலுகாவுக்கு காரில் அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், புகாரை வாங்கி காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும் கூறி நடுரோட்டில் அமர்ந்து சிடி ரவி தர்ணா செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிடி ரவிக்கும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நெருங்கிய பந்தம் உள்ளது. அதாவது அரசியலுக்கு நுழைவதற்கு முன்பு அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தார். அவர் சிக்கமகளூர் மாவட்ட எஸ்பியாக பொறுப்பு வகித்தார். அந்த சமயத்தில் சிக்கமகளூர் பாஜக எம்எல்ஏவாக இருந்தவர் சிடி ரவி. அதன்பிறகு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.
அண்ணாமலை பாஜகவில் இணைய கர்நாடகா பாஜக தலைவர்கள் தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதில் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், சிடி ரவி உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதுதவிர அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டபோது தமிழகத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக சிடி ரவி தான் செயல்பட்டார். இருவரும் நெருக்கமாக செயல்பட்டனர். இதனால் அண்ணாமலைக்கு குருவாக சிடி ரவி கருதப்படும் நிலையில் தான் தற்போது கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.