ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில் இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் தனது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்-ஐ ஜூலை 20 ஆம் தேதி கொடுக்க உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் 2வது ஒரு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பட்டியலிடப்பட உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்னும் நிதி சேவை பிரிவை தனியாக பிரித்து அதை பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளது. இதற்கான ஒப்புதலை மும்பை NCLT கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் எப்போது பட்டியலிடப்போகிறது என்பதை ஆலோசனை செய்ய உள்ளதாக மும்பை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜூலை 20 ஆம் தேதி என தேர்வு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து தனியாக பிரிந்து பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிலையில் அனைத்து பங்குதாரர்களுக்கும் இதே ஜூலை 20ஆம் தேதி நிதிச் சேவை பிரிவின் பங்குகளை பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்கள் செய்யப்பட்ட ஒப்பந்த்தின் படி ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் பிரிக்கப்பட்ட பின்பு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என பெயர் மாற்றப்படும். பெயர் மாற்றப்பட்டு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய பட்டியலிடப்படும்.
இந்த நிலையில் ஜூலை 20 ஆம் தேதி 10 ரூபாய் முகமதிப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து தரப்பு முதலீட்டாளர்களுக்கும் தலா ஒரு 10 ரூபாய் முகமதிப்புடைய ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அளிக்கப்படும். அதாவது ஒரு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கிற்கு ஒரு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அளிக்கப்பட உள்ளது.
முகேஷ் அம்பானியின் நீண்ட நாள் ஐபிஓ கனவும் இதன் மூலம் நிறைவேற உள்ளது. இந்திய நிதி சேவையில் இறங்கும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வர்த்தகத்திலும், பங்குச்சந்தை மதிப்பீட்டிலும் அதிகப்படியான லாபம் கொடுக்கும் பட்சத்தில் ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் நியூ எனர்ஜி என தனித்தனியாக பிரிக்கப்பட்டு பங்குச்சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் லாபம் அளிக்க கூடிய பெரும் வாய்ப்பு. சரியாக யோசித்து சந்தை நிலவரத்தை தெரிந்துக்கொண்டு நீங்க வருடம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு முறைக்கு 10 முறை யோசித்து முதலீடு செய்யுங்கள்.