சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை நகர்ப்புறங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் குளிர்ச்சியான வானிலை நிலவும் நிலையில் இதனால் பொதுமக்கள் செம ஹேப்பியில் இருக்கிறார்கள். இதற்கிடையே வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தமிழகம் முழுக்க: இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், "இதுவரை இல்லாத அளவுக்குத் தென்கிழக்கு பருவமழை மூலம் மீனம்பாக்கம் அதிகபட்ச மழையைப் பெற இருக்கிறது. இன்று மற்றும் நாளை இரவு சென்னையில் பரவலாக மழை பெய்யும்.. அடுத்த 10-14 நாட்களில் தமிழகம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.. குறிப்பாக வட தமிழக மாவட்டங்கள் மழை அதிகமாக இருக்கும்..
கடந்த காலங்களில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழை காலத்தில்- தென் சென்னைக்குத் தான் மிக அதிக மழை கிடைத்தது" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த காலங்களில் மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் பெய்த மழை விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வெளுத்தெடுக்கும் கனமழை: மீனம்பாக்கத்தில் கடந்த 75 ஆண்டுகளில் ஜூன் முதல் செப். வரையிலான காலகட்டத்தில் இந்தாண்டு பெய்த மழை தான் அதிகபட்சம். 1996இல் 871 மிமீ மழை பெய்துள்ளது. அடுத்து இந்தாண்டு 788 மிமீ மழை பெய்துள்ளது. இருப்பினும், இந்த மாதம் இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் மழை மேலும் அதிகரிக்கலாம். இதற்கு அடுத்து 1995 மற்றும் 1967 ஆண்டுகளில் 782 மற்றும் 723 மிமீ மழை பெய்துள்ளது.
நுங்கம்பாக்கத்தைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப். வரையிலான காலகட்டத்தில் இந்தாண்டு 603 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 2010 ஆண்டுகளில் இது 17ஆவது இடத்தில் இருக்கிறது. இந்த மாதத்தில் இன்னும் 14 நாட்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் போட்டி: தமிழ்நாடு வெதர்மேன் மேலும் தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீனம்பாக்கத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மொத்தம் 225.3 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த செப். மாதம் இப்போது 16ஆம் தேதி வரை 98.6 மி.மீ. மழை பெய்துள்ளது.
இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் மாதம் மழையை ஓவர்டேக் செய்யுமா என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.. இந்தாண்டு போட்டி கடுமையாக இருக்கும். நேற்று வடசென்னை கத்திவாக்கம் மற்றும் பொன்னேரி புறநகர்ப் பகுதியில் முறையே 44 மற்றும் 49 மி.மீ. மழை பெய்துள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.