மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை லோக்சபா செயலகம் இன்று திரும்பப் பெற்றது. இதனையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி.யாக மீண்டும் நாடாளுமன்றம் திரும்பினார்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் மோடி பெயரை முன்வைத்து பேசிய பேச்சுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களா திரும்பப் பெறப்பட்டது. அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக்கு குஜராத் அமர்வு மற்றும் குஜராத் உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.
இதனையடுத்து ராகுல் காந்தியின் பறிக்கப்பட்ட எம்.பி. பதவி உடனே திரும்பி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உடனடியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்த பிறகும், அவரது எம்.பி. பதவி நீக்கத்தை ஏன் திரும்ப பெறவில்லை? அவரை தகுதி நீக்கம் செய்யும்போது காட்டப்பட்ட அவசரம், இப்போது எங்கே போனது? நாடாளுமன்றத்தில் சகோதரர் ராகுல் காந்தியின் இருப்பைக் கண்டு பாஜக அஞ்சுகிறதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. ஏற்கனவே மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. தற்போது ராகுல் காந்தி எம்.பி. பதவியை திரும்ப வழங்கும் இந்த விவகாரத்தை கையில் எடுப்பது எனவும் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி நாடாளுமன்றம் திரும்புவதை எதிர்க்கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தன.
இந்நிலையில் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை லோக்சபா செயலகம் இன்று திரும்பப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி. யாக ராகுல் காந்தி இன்று மீண்டும் நாடாளுமன்றம் திரும்பினார்.