சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் பக்தரிடம் திருப்பி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். அந்த ஐபோன் கிடைக்குமா என அதன் உரிமையாளர் தவித்து வரும் நிலையில் சேகர்பாபு என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி திருக்கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு நேற்றைய தினம் உண்டியல் திறக்கப்பட்டது. இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜலட்சுமி முன்னிலையில் உண்டியல் திறப்பு நடந்தது.
அப்போது அந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கம், வெள்ளி, சில்லறைகள், நாணயங்கள் என இருந்தன. இது மொத்தம் ரூ 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம் , 620 கிராம் வெள்ளி இருந்தது. இத்துடன் ஒரு செல்போனும் இருந்தது.
இது யாருடையது என கோயில் நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த போன், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டது. இதுகுறித்து தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே மகிழ்ச்சி அடைந்த தினேஷ் திருப்போரூர் கோயிலுக்கு வந்து தனது போனை பெற்றுக் கொள்ளலாம் என தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வந்துள்ளார். ஆனால் கோயில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே சொந்தம் என கூறி போனை தர மறுத்துவிட்டனர்.
அந்த போனின் விலை ரூ 1.50 லட்சம் என்றும் அது விலையுயர்ந்த ஐபோன் என்றும் தினேஷ் கேட்டு பார்த்தார். ஆனால் கோயில் நிர்வாகமோ முடியவே முடியாது. வேண்டுமானால் உங்கள் போனில் இருக்கும் தரவுகளை எடுத்துக் கொண்டு போனை கொடுங்கள் என்றனராம். இதையடுத்து அந்த போனில் இருந்த போட்டோக்கள், கான்டாக்ட்கள், முக்கிய மெசேஜ்களை தினேஷ் எடுத்துக் கொண்டு போனை திருப்பி கொடுத்தார்.
இந்த போனை கடந்த அக்டோபர் மாதம் கந்தசாமி கோயிலுக்கு வந்த போது தினேஷ் கோயில் உண்டியலில் தவறவிட்டாராம். இந்த நிலையில் சில அதிகாரிகளிடம் தினேஷ் பேசி பார்த்ததில் வேண்டுமானால் அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதி பாருங்கள் என்றார்களாம். அதன்படி தினேஷ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அறநிலையத் துறை விதிகளை ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் செல்போனை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பாளையத்தம்மன் என்ற படத்தில் ராம்கியும் திவ்யா உன்னியும் சுவாமி கும்பிட செல்வர். அப்போது உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக குழந்தை உண்டியலில் தவறி விழுந்துவிடும். உடனே பதறும் திவ்யா உன்னி குழந்தை , குழந்தை என கதறுவார். ராம்கி அங்கிருந்த ஒரு நாற்காலியை போட்டு ஏறி குழந்தையை தூக்கிவிடுவார். பிறகு இருவரும் குழந்தையுடன் செல்ல தயாராவர்.
அப்போது கோயில் நிர்வாகத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தி, அங்கே பாருங்கள் என போர்டை காட்டுவார்கள். அந்த போர்ட்டில் "உண்டியலில் விழும் அனைத்தும் அம்மனுக்கே சொந்தம்" என இருக்கும். அதற்கு திவ்யா உன்னி, உண்டியலில் விழும் பணம், நகைதான் அம்மனுக்கு சொந்தம், குழந்தை எப்படி அம்மனுக்கு சொந்தமாகும் ? என கேள்வி எழுப்பிவிட்டு ராம்கியும் திவ்யாவும் அந்த இடத்தை விட்டு கிளம்புவார்கள்.