கன்னியாகுமரியில் மாணவியை மயக்க மருந்து தடவி பலாத்காரம் செய்த மர்ம ஆசாமி.. கர்ப்பத்தால் அம்பலம்

post-img

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 11ம் வகுப்பு மாணவியை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, வீட்டில் அந்த பெண் சாவியை போட்டு திறந்த உடனே, பின்னால் நின்றபடி கைக்குட்டையால் வாயை முடியுள்ளார். அந்த நொடி மாணவி மயங்கியுள்ளார். அவரை அந்த மர்ம ஆசாமி பலாத்காரம் செய்துள்ளார். இதனை மாணவி மறைத்துள்ளார். ஆனால் கர்ப்பம் ஆனதால் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகள், தங்களிடம் யாராவது அத்துமீற முயன்றால் உடனடியாக காவல்துறைக்கு அழைப்பது நல்லது. காதலன், நண்பன், உறவினர் என எந்த வகை உறவாக இருந்தாலும் அத்துமீறுவதை அனுமதிக்கவே கூடாது. ஒருவேளை உங்களுக்கு குளிர்பானதத்தில் மயக்க மருந்துகொடுத்து அத்துமீறினால் அல்லது கைக்குட்டையில் மயக்க மருந்தை வைத்து அத்துமீறினால் அல்லது உங்களுக்கு யார் என்றே தெரியாத ஒருவர் அத்துமீறினாலும், வெளியில் சொன்னால் அசிங்கம் என்று நினைத்து பயந்துமறைக்க வேண்டாம். தைரியமாக வெளியே கூறி நடவடிக்கை எடுக்க வைப்பது தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பெருஞ்சிலம்பு பகுதியில் தொழிலாளி ஒருவரின் மகள் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு பள்ளியில் கணித தேர்வு நடந்துள்ளது. தேர்வு முடிந்ததும் அந்த மாணவி வழக்கம்போல் வீட்டிற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பெருஞ்சிலம்பு பகுதியில் இறங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு நடந்து சென்று தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றுள்ளார்.
அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, திடீரென மாணவியின் முகத்தில் கைக்குட்டையை வைத்துள்ளார். இதில் மாணவி மயங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து மாணவி கண் விழித்து பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்துள்ளார். ஆடைகள் கலைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தான், அந்த மர்ம ஆசாமி மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வைத்ததில் தான் மயங்கியதும், அதன்பிறகு அந்த ஆசாமி தன்னை பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றதையும் உணர்ந்து கதறி அழுதார். எனினும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என பயந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் கூறாமல் மறைத்துவிடடார்.
இந்தநிலையில் மாணவின் தந்தை வேலை நிமித்தமாக குடும்பத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் கூத்தாட்டுகுளம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். சில மாதங்கள் கடந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் மாணவியை எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மாணவியிடம் கேட்டபோது, தனக்கு ஏப்ரல் மாதம் நடந்த கொடுமையை கூறி மாணவி கதறி அழுதார்.

அதே சமயத்தில் மாணவி கர்ப்பமாக இருப்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மார்த்தாண்டத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மயக்க மருந்து தடவி பலாத்காரம் செய்த அந்த ஆசாமி யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது எதுவும் தெரியவில்லை என்று மாணவி கூறினார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post