சைலேந்திர பாபுவை காரில் உட்கார வைத்து!மலர் தூவி வடம் பிடித்து இழுத்தனர் ...

post-img

தமிழகத்தின் டிஜிபியாக பணியாற்றிய சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து தமிழக சட்டம் ஒழுங்கு துறையின் 32 ஆவது புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த சைலேந்திர பாபு கண்ணீருடன் விடை பெற்றார்.

மயிலாப்பூர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜிவாலுக்கு சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். அது போல் சென்னை மாநகர காவல் துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டார். அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். உடல்நலம் குறித்த டிப்ஸ்களை அடிக்கடி அளித்து வருவார். மேலும் உடல்நலனில் இளைஞர்கள் அக்கறை காட்ட அவர்களுக்கு ஊன்றுகோலாக இருப்பார். அது போல் ஆன்லைன் மோசடி குறித்து வீடியோ வாயிலாக அவ்வப்போது எச்சரிக்கை விடுப்பார்.

கஞ்சா ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு 2.0 போன்ற ஆபரேஷன்களை கையில் எடுத்தார். சைலேந்திர பாபு நேற்று ஓய்வு பெற்ற நிலையில் அவரையும் அவரது மனைவியையும் காரில் உட்கார வைத்தனர். பிறகு அந்த காரில் கயிற்றை கட்டி புதிய டிஜிபி சங்கர் ஜிவால், புதிய ஆணையர் ரத்தோர் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது பூக்களையும் தூவினர். இதற்கு பெயர் ரோப் புல்லிங் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு நடத்தப்பட்டு பிரியாவிடை நிகழ்ச்சியும் கொடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த மரியாதை வழங்கப்பட்டது. ஓய்வு பெறும் காவல் துறை தலைமை இயக்குநரையும் அவரது மனைவியையும் காரில் அமர வைத்து அதில் கயிற்றை கட்டி டிஜிபி அலுவலக கட்டடத்தின் வாசலில் இருந்து அந்த வளாகத்தின் பிரதான வாயில் வரை இழுத்து வருவர்.

ஓய்வு பெறும் டிஜிபிக்கு புதிய டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி அந்தஸ்தில் இருப்போர் ரோப் புல்லிங் மரியாதையை செலுத்துவர். இது காவல் அதிகாரிக்கு கிடைக்கும் உச்சபட்ச மரியாதை ஆகும். இந்த உச்சபட்ச மரியாதையை தனது குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே மனைவியையும் அமர வைக்கிறார்கள்.

இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்தே பின்பற்றப்படுகிறது. 1874 ஆம் ஆண்டு ராபின்சன் என்பவர் சென்னை மாகாணத்தின் காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த பதவிக்கு வந்த முதல் நபர் அவர் என்பதால் அவருக்கு ரோப் புல்லிங் மரியாதை கொடுக்கப்பட்டது. அந்த காலத்தில் சாரியட் வண்டியில் உட்கார வைத்து மரியாதை செய்வர். இந்த காலத்தில் காரில் உட்கார வைத்து ரோப் புல்லிங் செய்கிறார்கள். மேலும் இந்த ரோப் புல்லிங் மரியாதையை அந்த அதிகாரி விரும்பினால் மட்டுமே தருவார்கள்.

Related Post