நீங்க கோடீஸ்வரன் ஆகலாம்..கிளப்பி விட்ட ’யூட்யூப்’ ஜோதிடர்! மொட்டை வெயிலில் தியானம் செய்த பக்தகோடிகள்

post-img
நாமக்கல்: நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவிலில் திடீரென கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் திடீரென தியானம் செய்யத் தொடங்கிய பக்தர்களால் கோவில் வளாகமே பரபரப்பானது. என்ன? ஏதென்று விசாரித்த போதுதான் யூட்யூப் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு மொட்டை வெயிலில் தியானம் செய்ய வந்த கூட்டம் தான் அது என்ற தகவல் கிடைத்தது. நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. மார்கழி மாதம் நரசிம்மர் கோயிலில் தினசரி பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி முதல் நாளான நேற்று நரசிம்மர் கோவிலில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களோடு கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் அதிகாலை முதலே கூடினர். அதனை தொடர்ந்து சூரிய உதயத்திற்கு பின்பு அவர்கள் கோயில் வளாகம் முழுவதும் அமர்ந்து ஒரே இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் தியானம் செய்தனர். நேரம் செல்ல செல்ல நூற்றுக்கணக்கில் இருந்த பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கை கடந்தது. தொடர்ந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. அங்கும் கூட்டம் கூடியதால் கோவிலுக்கு வெளியேயும் கொளுத்தும் வெயிலையும் பாராமல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. என்னடா இது நம்ம கோவிலில் இவ்வளவு கூட்டமா? என அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிசயத்து போயினர். மேலும் கோயிலில் கூட்டம் கூட்டமாக வந்து பக்தர்கள் தியானம் செய்த தகவலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களும் நாங்களும் தியானம் செய்கிறோம் என கோவிலில் அமர்ந்தனர். இந்த நிலையில் எதற்காக இவ்வளவு கூட்டம் ஏன் தியானம் செய்கிறீர்கள் என கேட்டபோதுதான் அந்த ரகசியம் தெரிய வந்தது. பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த ஆன்மீக ஜோதிடர் ஒருவர், நேற்றைய தினம் (16.12.24) மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்வதால், நாமக்கல் நரசிம்மர் கோவிலில் உள்ள லஷ்மி நரசிம்மர் மற்றும் நாமகிரி தாயாருக்கு சிறப்பு பூஜை செய்து சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தால் சகல விதமான செல்வங்கள் கிடைக்கும் என தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆன நிலையில், இதனை பார்த்த பொதுமக்கள் திடீரென நாமக்கல் நரசிம்மர் கோவிலில் குவிந்தனர் என்ற தகவல் கிடைத்தது. இங்கு மட்டுமல்ல ஏற்கனவே அப்படி ஒரு சம்பவம் திருச்செந்தூரில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக பவுர்ணமி தினத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் முழு நிலவினை பார்த்து பூஜை செய்து, அதிகாலையில் முருகப் பெருமானை தரிசித்தால் நன்மை கிடைக்கும் என தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செய்தால், வேண்டுதல் நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி தினங்களன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்து வருகிறது. அன்று குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து பரிகார பூஜைகள் செய்து, வழிபாடு நடத்துகின்றனர். அப்படித்தான் நாமக்கல் கோவிலிலும் கூட்டம் குவிந்துள்ளது.

Related Post