சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் வாங்கிய நிலையில், சீனிவாசன், ரூபா குருநாத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், கடந்த 1946 இல் எஸ்.என்.என். சங்கரலிங்க ஐயர் மற்றும் டி.எஸ். நாராயணசாமி ஆகியோரால் நிறுவப்பட்டது. திருநெல்வேலியில் சுண்ணாம்புக் கல் வளமாக இருப்பதை அறிந்த இவர்கள் சங்கர் சிமெண்ட் என்ற ஆலையை உருவாக்கினர். நாராயணசாமியின் மகன் என். சீனிவாசன் சங்கரலிங்க ஐயரின் பேத்தி சித்ராவை மணந்த பிறகு அவர்களின் வணிக உறவு குடும்ப உறவாக மாறியது.
1968 இல் தந்தை நாராயணசாமி இறந்த பிறகு சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்,தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்று. 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம், சென்னை ஐஐடி மற்றும் கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பயன்படுத்தப்பட்டது இந்தியா சிமெண்ட்ஸ் தான்.
தென்னிந்தியாவின் நம்பர் 1 சிமெண்ட் நிறுவனமாக திகழ்ந்தது இந்தியா சிமெண்ட்ஸ். சீனிவாசன், ஐபிஎல் கிரிக்கெட் அணியான சி.எஸ்.கேவின் உரிமையாளராக உள்ளார். பிசிசிஐ தலைவராகவும், ஐசிசி தலைவராகவும் கோலோச்சினார் சீனிவாசன். இதைத்தொடர்ந்து, விலை ஏற்றம், நிறுவனங்கள் இடையே விலைப் போர் உள்ளிட்ட காரணங்களால் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவெடுத்தார் சீனிவாசன்.
இந்நிலையில், கோடீஸ்வரர் குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கியது. தற்போது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 55.5% பங்குகளை அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சீனிவாசன், அவரது மகள் ரூபா குருநாத் ஆகிய இருவரும் தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சீனிவாசன், முழு நேர இயக்குநரான ரூபா குருநாத் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
டிசம்பர் 24 ஆம் தேதியான நேற்று ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்டின் துணை நிறுவனமாக மாறி உள்ளது. அதேசமயம், ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட்டின் 30 சதவீத பங்குகளை இந்தியா சிமெண்ட்ஸ் ஷேர்ஹோல்டர்ஸ் டிரஸ்ட், அதே பெயரில் வைத்துக் கொண்டுள்ளது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.