மீண்டும் ‘விர்ரென’ ஏறிய முருங்கைக்காய்.. கிட்டவே நெருங்க முடியாது! கோயம்பேடு சந்தையில் ரூ.50 உயர்வு!

post-img
சென்னை: முருங்கைக்காய் விலை மீண்டும் விர்ரென உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் கிலோ 300 வரை விற்பனையாகிறது. தமிழகத்தில் பருவமழை காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் இல்லாதது, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் முருங்கைக்காய் வரவழைக்கப்பட்டது போன்ற காரணங்களால் அதன் விலை அண்மையில் வெகுவாக உயர்ந்தது. கோயம்பேடு சந்தையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.400 வரை உயர்ந்தது. தமிழக எல்லையை ஒட்டி ஆந்திரா, கர்நாடக மாநில பகுதிகளில் முருங்கைக்காய் கொள்முதல் செய்து கொண்டுவரப்பட்டதன் காரணமாக விலை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது முருங்கை விலை. கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.50 அதிகரித்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரை மொத்த விலையில் ரூ.200-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.250-க்கு விற்பனை விற்கப்படுகிறது. மழையால் வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு முருங்கைக்காய் விலை ரூ.40ஆக அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் நாசிக் முருங்கைக்காய் விலை சற்று குறைந்து கிலோ ரூ.210 க்கு விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்ற்கு அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மூலனுார் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் முருங்கை வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரத்தில் தற்போது விலை சற்று குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post