உண்மையான லக்கி பாஸ்கர்.. 7 முறை கண்டத்தில் இருந்து உயிர் தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு

post-img

பாரிஸ்: ரயில் விபத்து, விமான விபத்து, பஸ் விபத்து, கார் விபத்து என 7 முறை பெரிய பெரிய கண்டங்களில் இருந்து உயிர் தப்பியவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. இவர் தான் உண்மையான லக்கி பாஸ்கர் என்று சொல்லும் அளவிற்கு இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், இவருக்கு எப்படி லாட்டரி பரிசு கிடைத்தது என்பதையும் இங்கு பார்க்கலாம்.
அதிர்ஷ்டம் யாருக்கும் எப்படி அடிக்கும்? எந்த ரூபத்தில் வரும்? என்றே தெரியாது என்பது அதிர்ஷ்டத்தை நம்புவர்களின் கருத்தாக இருக்கும். கடின உழைப்பால் வாழ்க்கையின் உச்சத்திற்கு போனவர்களை கூட எல்லாம் அதிர்ஷ்டம்தான் என்று சொல்வதை பார்த்து இருக்கிறோம். அதெல்லாம் இருக்கட்டும்.. 7 முறை கண்டத்தில் இருந்து உயிர் தப்பிய ஒருவருக்கு லாட்டரியில் ரூ5 கோடி அடித்துள்ளது. இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
குரோட்டேரியா நாட்டை சேர்ந்தவர் பிரேன் செலக். 7 முறை கொடூர விபத்துக்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இவருக்கு கடைசியாக லாட்டரியில் ரூ.5 கோடி அதிர்ஷ்டமும் அடித்ததாம். இவர்தான் உண்மையான அதிர்ஷ்டசாலி என பலரையும் நினைக்க வைக்கும் குரோட்டேரியாவை சேர்ந்த பிரேன் செலக்கிற்கு, 7 முறை எப்படியெல்லாம் கண்டத்தில் இருந்து தப்பினார் என்பது பற்றி இங்கே பார்ப்போம்..
குரோட்டோரியாவில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரேன் செலக். மியூசிக் டீச்சரான இவர் கடந்த 1962 ஆம் ஆண்டு சரஜேவோ நகரில் இருந்து டுப்ரோவ்னிக் நகரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். இவர் பயணம் செய்த ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இதில் 17 பேர் பலியாக எலும்பு முறிவு உள்பட பலத்த காயங்களுடன் செலக் உயிர் தப்பினாராம்.
அதற்கு அடுத்த ஆண்டே ஜாக்ரெப்பில் இருந்து ரிஜேகே வரை சென்ற விமானத்தில் இவர் செல்லும் போது நடு வானில், திடீரென்று விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதில், 19 பேர் உயிரிழந்த நிலையில், செலக் பாரசூட் மூலமாக குதித்து உயிர் தப்பியதாக சொல்கிறார்.
இப்படி இரண்டு முறை கண்டத்தில் இருந்து தப்பினாலும், மூன்றாவது முறையாக கோர விபத்தில் சிக்கியிருக்கிறார். இந்த முறை அவர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இதில் 4 பேர் உயிர் இழந்த நிலையில், செலக் நீந்தி உயிர் பிழைத்தாராம்.
அப்போதும் இவரை துரதிர்ஷ்டம் விடவில்லை. 1970 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒன்றில் நூழிலையில் உயிர் தப்பியிருக்கிறார். இவர் வாகனம் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவசர அவசரமாக வெளியேறி எஸ்கேப் ஆகியிருக்கிறார். 1973 ஆம் ஆண்டும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடும் போது காருக்குள் பெட்ரோல் கசிந்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திலும் செலக் உயிர் தப்பியுள்ளார்.
இப்படியாக 7 முறை கண்டத்தில் இருந்து தப்பிய செலக்கிற்கு கடைசியாக நடந்த சம்பவம்தான் வாழ்வில் மறக்க முடியாததாக மாறியிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு குரோட்டரியன் லாட்டரியில் டிக்கெட்டில் இவருக்கு 6,00,000 யூரோ பரிசு அடித்து இருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடியாகும். இந்த பரிசுத்தொகை கிடைத்ததை எதிர்பார்க்காத செலக், சொகுசான வீட்டு ஒன்றை வாங்கியிருக்கிறார்.
எனினும், இந்த வீட்டை 2010 ஆம் ஆண்டு விற்ற செலக், தனது 5-வது மனைவியுடன் தற்போது எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாராம். இது குறித்து அவர் கூறுகையில், 'சினிமா படங்களை விட உண்மையான வாழ்க்கை மிகவும் விசித்திரமானது' என சொல்லியிருக்கிறார். அதேவேளையில், இவர் கூறிய பல விபத்து சம்பவங்களை உண்மையா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் சொல்கிறார்கள்.

Related Post