சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் டெல்லியில் நடைபெற்று வரும் குளோபல் ஃபின்டெக் விழாவில் இந்திய தேசிய பேமெண்ட் கழகத்தின் (என்பிசிஐ) புதிய தயாரிப்புகளை நேற்று அறிமுகப்படுத்தினார். அதாவது யுபிஐ சேவைகளில் பயன்படுத்தப்படும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்தார். இதில் 4 முக்கிய அறிவிப்புகள் கவனம் பெற்றன.
யுபிஐ தற்போது இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. எல்லோரும் யுபிஐ சேவையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்தியா முழுக்க யூபிஐ பயன்பாடு தற்போது உச்சம் தொட்டுள்ளது. உலகில் அதிக அளவில் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
தினமும் 10 லட்சம் பேர் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போதுதான் வென்மோ போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா காலத்தில் இருந்தே யுபிஐ பயன்பாடு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் யுபிஐயில் 4 புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
வசதி 1 : அந்த புதிய தயாரிப்புகளில் அதிகம் கவனம் ஈர்த்த ஒன்று ஹலோ! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் மூலமே இனி யுபிஐ செயலிகளை பயன்படுத்த முடியும். ஆப்ஸ், டெலிகாம் அழைப்புகள் மற்றும் IoT சாதனங்கள் மூலம் குரல் வழியாக UPI பணம் செலுத்த பயனர்களுக்கு உதவும் வசதிதான் இந்த ஹலோ!. இது விரைவில் பல பிராந்திய மொழிகளிலும் கிடைக்கும்.
வசதி 2: அதாவது இனிமேல் வாய்ஸ் மூலமாகவே யுபிஐ செயலிகளை செயல்படுத்த முடியும். அதேபோல் LITE X என்று இன்னொரு வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். அதாவது இணையம் இல்லாமலே இந்த தயாரிப்பை பயன்படுத்த முடியும்.
வசதி 3: Near Field Communication- (NFC- என்ற புதிய வசதியும் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த வசதி மூலம் போனை பேமெண்ட் செய்ய வேண்டிய இடத்தில் லேசாக தட்டினாலே பணம் பேமெண்ட் ஆகிவிடும். இதற்காக க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வேண்டியது இல்லை.
வசதி 4: யுபிஐ வசதியில் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுக்கும் வசதியை கொண்டு வர ஆர்பிஐ அனுமதித்துள்ளது. அதன்படி யுபிஐ செயலி மூலம் ப்ரீ அப்ரூவ்ட் லோன் எடுப்பதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இதற்கான கடன் வாங்கும் வசதியை யுபிஐ செயலிகளுக்கு வழங்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரிக்கும் என்கிறார்கள்.
யுபிஐ புரட்சி: இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது.
சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.
யுபிஐ: இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது.
சமீபத்தில்தான் யுபிஐ பேமெண்ட் மூலம் பணம் செலுத்தும் நபர்கள் குறித்த சுவாரசிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. அதன்படி 21,457 பேரில் 37 சதவிகிதம் பேர் தாங்கள் அடிக்கடி யுபிஐ பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். மீதம் உள்ள 63 சதவிகிதம் பேர் எப்போதாவது யுபிஐ பயன்படுத்துவோம் அல்லது யுபிஐ பயன்படுத்தவே மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர். இந்த 37 சதவிகித பேர்தான் அதிக அளவில் பணம் செலவு செய்வதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
யுபிஐ பயன்படுத்தாத நபர்களை விட இவர்கள் 34 சதவிகிதம் அதிகம் செலவு செய்வதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களின் அத்தியவாசிய தேவைகளில் துண்டு விழுவதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யுபிஐ நபர்கள் மிக அதிக அளவில், கூடுதல் செலவுகளை தேவையின்றி செய்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களால் பணத்தை சரிவர நிர்வகிக்க முடியவில்லை. இவர்களின் வங்கி கணக்கில் பணம் வேகமாக கரைகிறது.
பணத்தை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்ற புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. யுபிஐ வைத்து இருப்பவர்கள் இப்படி அதிக பணம் செலவு செய்வதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனாலும் பணம் செலுத்தும் போது ஏற்படும் அந்த உணர்வு யுபிஐ மூலம் வருவது இல்லை. தாங்கள் செலவு செய்கிறோம் என்ற எண்ணம் வரவில்லை. இதனால் மக்கள் அதிக அளவில் யுபிஐ மூலம் செலவு செய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.