8 மணி வரை கெடு.. ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தல்

post-img

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இரவு 8 மணிக்குள் கலைந்து செல்ல கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த செப்.28-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடைபெறும் இடத்தில் ஆசிரியர்கள் பந்தல்களை அமைத்து, இரவு பகலாக குழந்தைகளுடன் தங்கியுள்ளனர்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் சில ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். உண்ணாவிரதம் தொடர்ந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
மூன்றாம்ம் கட்டமாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு விடுத்தார். இதில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், சிறிது அவகாசம் வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தாக ஜெ.ராபர்ட் கூறினார்.
5-வது நாளாக உண்ணாவிரதம்.. அமைச்சருடனான பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும்- ஆசிரியர்கள் சங்கம்
ஏற்கெனவே பல ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதால் இந்தமுறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை. தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம் என்று ராபர்ட் தெரிவித்தார்.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மட்டுமல்லாது, ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், டெட் ஆசிரியர்கள் சங்கத்தினரும் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும், நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் அமைச்சரின் அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Post