திருச்சி: சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். அத்தகைய ஒரு தலைவர் தான் பிரதமர் மோடி என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக ஆளும் திமுக அரசு கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. அதுபோக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அவ்வப்போது அமைந்து விடுகிறது. இதற்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.ஸ்.எஸ் நிர்வாகி போல செயல்படுவதாக கூட கடுமையான விமர்சனங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாடி வருகின்றன. ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கூட திமுக பேசி வருகிறது. இந்த நிலையில், திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமை பண்பு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய போட்டி நிறைந்த உலகில் தலைமை பண்புடன் சிறந்து விளங்க புதிய திறன்களை இளம் தலைமுறையினர் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்துவார்கள். அதுபோன்ற ஒரு தலைவராக நமது பிரதமர் மோடி இருக்கிறார்.
இந்தியாவை பொறுத்தவரை ஊழல் பெரும் பிரச்சினையாக இருந்தது. பயனாளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கினால் ஒரு ரூபாயில் 15 பைசாதான் அவர்களுக்கு கிடைக்கிறது. மீதம் உள்ள 85 பைசா ஊழலாக சென்று விடுகிறது. இதனை கருத்தில் கொண்டுதான் பிரதமர் மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உருவாக்கின்றார். இதற்காகவே ஜன் தன் வங்கி கணக்குகளை பிரதமர் மோடி தொடங்ki வைத்தார்.
தற்போது நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவே சென்று விடுகிறது. இந்தியா பல பிராந்தியங்களை உள்ளடக்கியது என்று கூறி வந்தார்கள். ஆனால், இந்தியா என்பது ஒரு குடும்பதான். எங்கு பிரிவினை பேச்சு எழுந்தாலும் அதற்கு கடுமையான எதிர்வினை எழும். 2047-ம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வல்லரசு நாடாக திகழும். இவ்வாறு அவர் கூறினார்.