அண்ணாமலைக்கு இதே வேலையா போச்சு.. போலீஸில் புகாரளித்த பியூஷ் மனுஷ்

post-img
கோவை: கோவை பாஜக அலுவலகம் அருகே, அண்ணாமலை தலைமையில் கருப்புப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்ணாமலை, வேலூரில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டது குறித்து ஆவேசமாக பேசியிருந்தார். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் அண்ணாமலை மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட அல் உமா இயக்க தலைவர் பாஷா கடந்த வாரம் உயிரிழந்தார். அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜக சார்பில் நேற்று முன் தினம் கருப்பு பேரணி நடத்தப்பட்டது. அதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "வேலூரில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு ஒரு பாஜக தொண்டர் எனக்கு போன் செய்து, 'அண்ணா குற்றவாளிகளை நான் கண்டுபிடித்துவிட்டேன். நீதிமன்றத்தில் 2.30 மணிக்கு சரணடைய போகிறார்கள். நான் வெட்டிவிட்டு சிறைக்கு செல்கிறேன். என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.' என்றார். இதுவரை பாஜக தொண்டர் யாரும் இப்படி பேசியதில்லை. கட்சியில் எழுச்சி வந்துவிட்டது. ஆயுதம் ஏந்த வேண்டாம் என்று நினைக்கும் பாஜக தொண்டர்கள் ஆயுதம் எடுக்க தயாராகிவிட்டார்கள். திருப்பி அடிக்கும்போது தான், நாளை பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்த யோசிப்பார்கள். பாஜக நீண்ட காலமாக அறவழியில் பொறுமையாக சென்று கொண்டிருக்கிறது. ஒருமுறை கட்டுப்பாட்டை இழந்துவிட்டால், அது மீண்டும் சேர முடியாது." என்று கூறியிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், கோவை மாநகர காவல் ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார் மனுவில், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதை ஒரு செய்தி தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் சட்டம் பற்றி தெரிந்து வைத்திருப்பார் என நினைத்தேன். ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துள்ள கூட்டத்தில் அண்ணாமலை, தனக்கு ஒரு தொண்டர் அழைத்து, கொலை செய்யப் போகிறேன். பெயலிலில் எடுத்துவிடுங்கள் என்று கூறியதாக சொல்லி, கட்சிக்கு எழுச்சி வந்துவிட்டது என்று கூறுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருநெல்வேலி நீதிமன்றம் அருகே ஒரு கொலை நடைபெற்றது. அதே பாணியில் மீண்டும் ஒரு சம்பவம் செய்ய திட்டமிடுகிறார்கள். வன்முறையை தூண்டி சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அண்ணாமலை பேசுகிறார். அவர் இப்படி பேசுவது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு அண்ணாமலை மீது இரண்டு புகார் அனுப்பி காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தொடர்ந்து வெறுப்பு பேச்சுகள், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவது, குற்ற செயல்களை ஊக்குவிப்பது போன்ற செயல்களில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இந்தப் புகாருடன் அண்ணாமலை கோவை கூட்டத்தில் பேசிய வீடியோவை இணைத்துள்ளேன். தொடர்ந்து பெரும்பான்மை இந்து மதம் மக்களை, சிறுபான்மை மக்களுக்கு எதிராக தூண்டிவிடும் வேலையை செய்கிறார். அதனால் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

Related Post