திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வாலிபரை கொடூர கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அண்ணன்-தம்பி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாங்கிய பணத்தை திரும்ப தராததால், இளைஞரை கடத்தி கண்களை சிதைத்து சித்ரவதை செய்து, கை, கால்களை கட்டிப் போட்டு வெட்டிக் கொலை செய்ததாக அதிர வைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளனர் கொலையாளிகள்.
திண்டுக்கல் தோமையார்புரம் மேடு பகுதியில் கண் மற்றும் கை கட்டப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் தாலுகா காவல் நிலை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.
மேலும், கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை தாலுகா காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? கொலைக்கான காரணம் என்ன?என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், உடல் இறந்த இடத்தில் மோப்ப நாய்கள் கொண்டும், தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் கை, கால்கள், வாய் உள்ளிட்டவை கட்டப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயங்கள் இல்லாத நிலையில் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு அந்த உடல் இங்கு போடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கினார்.
முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மாயமானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கிய நிலையில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் தான் என்பதை போலீசார் முதலில் உறுதி செய்தனர்.
பாலமுருகனை காணவில்லை என மனைவி சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பாலமுருகனுக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு குழந்தையும், 8 மாதத்தில் ஒரு குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொலை எதனால் நடந்தது என தெரியாமல் இருந்தது இதனை அடுத்து புறநகர் டி.எஸ்.பி சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இளைஞர் கொலை தொடர்பாக திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த இருதயராஜா மகன் ஜஸ்டின் ராஜா, மேட்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி மகன் லியோ சார்லஸ், சார்லஸ் சகோதரர் பன்னீர்செல்வம் , ஆர்.எம் காலனியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் முத்துக்குமார் , ஆர்ஆர் நகரைச் சேர்ந்த தான்தோன்றி மகன் கார்த்திக்குமார், வடமதுரை காப்பிலியபட்டியைச் சேர்ந்த மணியன் மகன் திருப்பதி , கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த வெங்குடுசாமி மகன் விக்னேஷ், ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட பாலமுருகன் திண்டுக்கல் அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வீடுகளுக்கு கடன் வாங்கிக் கொடுக்கும் பிரிவில் வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் பணியை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பாலமுருகன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஜஸ்டின் ராஜா, பன்னீர்செல்வம், லியோ ராஜா ஆகியோரிடம் பணம் கொடுத்தால் மூன்று மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.
இதனை நம்பி அவர்கள் தங்களது நண்பர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாயை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுருகன் அதனை திரும்பத் தராமல் இழுத்து அடித்துள்ளார். இதை அடுத்து ஜஸ்டின் ராஜா உள்ளிட்டோர் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து பாலமுருகனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கடத்தியுள்ளனர்.
தொடர்ந்து எரியோட்டில் அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்திருக்கின்றனர். பாலமுருகன் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் பாலமுருகனின் கண்களை சிதைத்து கை கால்களை கட்டி தோமையார்புரம் அழைத்து வந்திருக்கின்றனர். பின்பு அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு உடலை வீசிவிட்டு தப்பியது தெரிய வந்தது. இதனையடுத்து கொலைக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனங்கள், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், கொலையாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.