வெறுப்பு பேச்சு.. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை பணி நீக்க கோரி எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

post-img
டெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் சமீபத்தில் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அவரது கருத்துக்கள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை தூண்டுவதை போல இருப்பதாகவும், எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தீர்மானத்தை கொண்டு வர இருக்கின்றன. அரசியல் தலைவர்களை தாண்டி நீதி துறையில் இருப்பவர்களே வெறுப்பு பேச்சை கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதாவது, நீதிபதி சேகர் குமார் டிச.8ம் தேதி விஎச்பி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பொது சிவில் சட்டம் குறித்து சிறப்புரை ஆற்றியிருந்தார். அதில் அவர் பேசியதாவது, “இனி இங்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்வது செல்லுபடி ஆகாது. இப்படி திருமணம் செய்துக்கொண்டும், அதன் பின்னர் அவர்களுக்கு முத்தலாக் மூலம் பிரிவு வழங்குவதும் இனி நடக்காத காரியமாகும். எங்களை பாருங்கள்.. நாங்கள் குழந்தைகளுக்கு சகிப்புத்தன்மையையும், மற்றவர்களின் வலியை உணர்வதற்கும் இயற்கையை நேசிப்பதற்கும் கற்று தருகிறோம். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? குழந்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு உயிரை கொல்ல கற்று தருகிறீர்கள். இப்படி இருந்தால் அவர்கள் எப்படி சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்வார்கள்? எப்படி இருப்பினும் இனி இந்த நாடு பெரும்பான்மையினரின் விருப்பத்தின்படிதான் நடக்கும். பொது சிவில் சட்டத்தை ஆர்எஸ்எஸ், விஎச்பி மட்டுமல்லாது உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார். இந்த கருத்துக்கள்தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நீதிபதி பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும். இதில் நடுநிலை என்கிற போர்வையே கூடாது. அதுதான் சரியான நிலைப்பாடு. ஆனால் இங்கு நீதிபதி பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் பக்கம் நிற்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நீதிபதியின் பேச்சை தனது x தளத்தில் பகிர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பிரதிபலிக்க இருக்கிறது. குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபில், நீதிபதி மீதான பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இதற்கு முன்னர் இதேபோல நீதிபதிகள் மீது பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது போதுமான ஆதரவை பெறாத காரணத்தால் நிறைவேற்றப்படவில்லை. தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் 50 எம்பிக்களின் ஆதரவும், மக்களவையில் 100 எம்பிக்களின் ஆதரவும் தேவையாகும். தற்போது வரை நீதிபதி சேகர் குமாருக்கு எதிரான தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் 38 எம்பிக்களும் மக்களவையில் 50 எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post