டெல்லி: கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்குமாறு கனடாவிடம் இந்திய தூதரக உயர் ஆணையர் சஞ்சய் குமார் வர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.
சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
உளவு தகவல்: இந்த குற்றச்சாட்டிற்கு பின் அந்த நாடு மேற்கொண்ட உளவு தகவல்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கனடாவிற்கு உளவு ரீதியாக "ஒரு நாடு" உதவி செய்ததாக கூறப்படுகிறது. மனித உளவு மற்றும் சிக்னல் மூலம் மேற்கொள்ளப்பட்ட உளவு வழியாகவே இந்த குற்றச்சாட்டை கனடா வைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது மனிதர்கள் வழியாக வழங்கப்பட்ட உளவு தகவல், சில சிகனல்கள் மூலம் கண்டறியப்பட்ட உளவு தகவல்கள் வழியாக இந்த தகவல்களை கண்டறிந்ததாக கனடா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிக்னல் என்றால் போன் பரிமாற்றம், மெயில் பரிமாற்றம், போனை ஒட்டுகேப்பது போன்ற உளவு பணிகள்.ஆகும் அதேபோல் கனடாவிற்கு நெருக்கமாக இருக்கும் Five Eyes intelligence குழுவை சேர்ந்த வேறு ஒரு நாடும் தனது உளவு தகவலை கனடாவிற்கு வழங்கி உள்ளதாம்.
இதிலும் இந்தியாவிற்கு எதிரான தகவல் அடங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உளவு தகவல்கள் காரணமாகவே சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார்.
சந்தேகம்: இவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்குமாறு கனடாவிடம் இந்திய உயர் ஆணையர் சஞ்சய் குமார் வர்மா கேட்டுக் கொண்டுள்ளார். கனடா இந்த வழக்கில் போதுமான ஆதாரங்களை, தேவையான ஆதாரங்களை கொடுக்கவில்லை.விசாரணை மேற்கொள்வதற்கு ஏற்ற ஆதாரங்களை கொடுக்கவில்லை.
"ஆதாரம் எங்கே? உங்கள் விசாரணையின் முடிவு எங்கே? நாங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, விசாரணை ஏற்கனவே கறைபடிந்துவிட்டது என்று கூறுவோம். விசாரணை நேர்மையாக நடக்கவில்லை. இதற்குப் பின்னால் இந்தியா அல்லது இந்திய ஏஜெண்டுகள் இருக்கிறார்கள் என்று கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது, என்று கேட்டுள்ளார்.
யார் இவர்?: 1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்தியாவில் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டில், முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஜஸ்டின் ட்ரூடோவிடம் தேடப்படும் நபர்களின் பட்டியல் அளித்தார். அதில் நிஜ்ஜாரின் பெயரும் இருந்தது.
ஆனால் தொடர்ந்து கனடா அரசு நிஜ்ஜாருக்கு ஆதரவாக இருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை பரப்புவது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்ட நிஜ்ஜாரை நாடு கடத்துமாறு பஞ்சாப் காவல்துறை கோரியது. ஆனால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு பஞ்சாபின் லூதியானா நகரில் 6 பேர் கொல்லப்பட்ட மற்றும் 42 பேர் காயமடைந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில்தான் இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில்தான் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரை இந்திய அரசு கொன்றதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்