சென்னை: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை. புத்தகத்தை நடிகரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட அதை திருமாவளவனுக்கு பதிலாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அவருடைய கட்சி ஏப்ரல் மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்தனது இலக்கு 2026 சட்டசபை தேர்தல் என கூறிவிட்டார்.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகள் , மாநாடு எப்படியிருக்கும் என யோசித்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விஜய்யின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. இநத மாநாட்டில் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
அதே வேளையில் அதிமுகவை துளி கூட விமர்சிக்கவில்லை. திமுகவில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். தங்களது அரசியல் எதிரி திமுக என பெயர் சொல்லாமலேயே விமர்சித்திருந்தார். அது போல் திருமாவளவனின் கோரிக்கையான ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை தாங்கள் பரிசீலிப்போம் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.
இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் விஜய் வெர்சஸ் விசிக என பனிப்போர் நீண்டு கொண்டே இருந்த நிலையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதாக சொல்லப்பட்டது.
சென்னையில் டிசம்பர் 6ஆம் தேதி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அதை திருமாவளவன் பெற்றுக் கொள்கிறார் என சொல்லப்பட்டது.
திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த விஜய்யுடன் திருமாவளவன் மேடையை பகிர்ந்து கொள்வது குறித்து விவாதங்கள் ஏற்பட்டன. திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள போவதில்லை என சொல்லப்பட்டது.
இதுவும் பெரும் பேசுபொருளானது. அதாவது திமுகவின் நெருக்கடியால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியிருப்பதாவது: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என திருமாவளவன் கூறவில்லை.
சமரச பாயாசம் கிண்டுகிறவரோடு மேடையை பகிர்ந்து கொள்ள முடியாது என்றுதான் அவர் கூறியிருந்தார். நூல் வெளியீட்டாளர்களே திருமாவளவனை புறக்கணித்துவிட்டு பாயாசம்தான் வேண்டும் என்கிறார்கள். திருமாவளவன் புறக்கணித்துவிட்டார் என பொய் பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.
திருமாவளவனை யாரும் பின்னிருந்து வழிநடத்த முடியாது. திமுகவின் அழுத்தத்தால்தான் திருமாவளவன் பங்கேற்கவில்லை என கூறுவதெல்லாம் தவறு. அவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல சிலர் முயற்சிக்கிறார்கள் என விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் விஜய் புத்தகத்தை வெளியிட அதை திருமாவளவனுக்கு பதிலாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு பெற்றுக் கொள்கிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage