டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வாக இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் BFSI பிரிவின் தலைவரும், இன்போசிஸ் பிரெசிடென்ட் மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையை பெற்றுள்ளது.
இதை உறுதி செய்யும் வரையில் இந்திய பங்குச்சந்தையில் பெரிய முதலீட்டாளராக இருக்கும் LIC நிறுவனம் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் முதலீடு செய்து இதன் மொத்த பங்கு இருப்பை 8.88 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது எல்ஐசி நிர்வாகம்.
மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டு தரவுகளின்படி, எல்ஐசி நிறுவனம் டெக் மஹிந்திராவில் வைத்திருந்த 8.07 சதவீத பங்குகளை ஒப்பிடுகையில் தற்போது 81 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 8.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெக் மஹிந்திராவில் இனி வரும் காலத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிய வாய்ப்புகள் உள்ளது.
நவம்பர் 11, 2022 மற்றும் ஜூன் 6, 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் திறந்த சந்தையில் இருந்து எல்ஐசி நிறுவனம் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் மூலம் அதன் பங்கு இருப்பு 2.015 சதவீத அதிகரித்துள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனம் சராசரியாக 1050.77 ரூபாய்க்கு டெக் மஹிந்திரா பங்குகளை வாங்கியுள்ளது. டெக் மஹிந்திரா பங்குகள் இன்று 2.07 சதவீதம் சரிந்து 1,073 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் டெக் மஹிந்திரா பங்குகள் 6.26 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ 5G-as-a-Service என்ற புதிய சேவையை சிஸ்கோ உடன் இணைந்து உலகளாவிய தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 5ஜி சேவை பிரிவில் விப்ரோ புதிய வர்த்தகம், வருவாய், வாடிக்கையாளர்களை பெற உள்ளது.
மேலும் டிசிஎஸ், இங்கிலாந்து நாட்டின் 2வது பெரிய பென்ஷன் நிறுவனமான Teachers' Pension Scheme-ன் 10 வருட நிர்வாக வர்த்தகத்தை பெற்றுள்ளது. Teachers' Pension Scheme-ன் தளத்தை டிஜிட்டல் சேவைகளில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய உள்ளது TCS BaNCS.