கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி கிராமத்தில் மின்சார மீட்டர் வழங்க விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மறைந்து நின்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் இந்த அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யவே லஞ்சம் வாங்குவதாக பல இடங்களில் புகார்கள் வருகிறது. பட்டா கொடுக்க, பத்திரப்பதிவு செய்ய, நிலத்தை அளக்க, விஏஓ அலுவலகங்களில் பல்வேறு சான்றிதழ்கள் வாங்க என பல புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வருகிறது. அப்படி வரும் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார், பணம் கேட்கும் அரசு ஊழியர்களை, பொறி வைத்து பிடித்து கைது செய்கிறார்கள். அப்படித்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர் கைதாகி உள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி சேசுராஜபுரத்தை சேர்ந்த விவசாயியான 38 வயதாகும் மோயிஸ் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நிலத்திற்கு மின் இணைப்பு பெற வேண்டும் என்று அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்தார். அதற்காக ரூ.21 ஆயிரம் கட்டணம் செலுத்திய அவருக்கு ரூ.16 ஆயிரத்து 500-க்கு மட்டும் ரசீது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மின் மீட்டர் வழங்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மோயிஸ் அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று போர்மேன் நொகனூர் கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் அலி என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் மீட்டர் வழங்குவதாக அவர் தெரிவித்தாராம். இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மோயிஸ் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர்கள் ரசாயன பவுடர் தடவிய பணத்தை விவசாயியிடம் கொடுத்து மின்வாரிய போர்மேன் அலியிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருக்கு பின்னாலேயே சென்று அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மறைந்து இருந்தனர். இதனிடையே மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற மோயிஸ் போர்மேன் அலியிடம் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் போர்மேன் அலியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்கள். அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற 10000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அஞ்செட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage