ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்தவகையில், இன்றுகூட, பரமக்குடி அருகே உள்ள கிராமத்துக்கு புதிய அரசு பேருந்து வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சுற்றுலா இடங்களையும் ஆன்மீக ஸ்தலங்களையும் கொண்டுள்ளது.. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள பரமக்குடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் நன்மையையும், வசதியையும் கருத்தில் கொண்டு, சில மாதங்களுக்கு கூடுதல் பேருந்து சேவை கொண்டுவரப்பட்டது.
பரமக்குடி: அதாவது, பரமக்குடியில் இருந்து பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக ராமநாதபுரம், கமுதி, மதுரை ஆகிய இடங்களுக்கு இந்த தினசரி கூடுதல் பேருந்து சேவையானது கொண்டுவரப்பட்டது.
அதேபோல, பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளுக்கும், பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்திற்கும் இப்படியொரு வசதி கிடைத்தது.. காரணம், இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எந்தவிதமான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லையாம்.
கிராம மக்கள்: இந்த கிராம மக்கள், சாயல்குடி அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டுமென்றால், ஊரிலிருந்து 4 கிலோ மீட்டர் சென்று அங்கிருந்து ராமநாதபுரம் சாயல்குடி ECR சாலைக்கு சென்று பஸ்ஸில் செல்லும் நிலைமை இருந்து வந்தது.. இதையடுத்து, முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏவும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பனிடம் தங்கள் ஊரின் வழியாக ராமநாதபுரம் அல்லது சாயல்குடி சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படியே, கோட்டையேந்தல் கிராம மக்களுக்கு பஸ் வசதி செய்து தரப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு முதல்முதலாக தங்கள் ஊருக்கு அரசு பஸ் வந்ததால் உச்சக்கட்ட மகிழ்ச்சிக்கு சென்றார்கள் கிராம மக்கள்.. அந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்தனர்.. பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு சால்வை அணிவித்து, தேங்காய் உடைத்தும் வரவேற்பு தந்து, தங்கள் கோரிக்கையை செய்து தந்த, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
ஏனாதிகோட்டை: ராமநாதபுரம் மாவட்டத்தின் மற்றொரு கிராமத்திற்கும், இதுபோலவே, அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டுள்ளது. பரமக்குடி அருகே உள்ளது ஏனாதிகோட்டை.. இந்த கிராமத்திற்கும், நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எந்தவிதமான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் கிடையாது.. கிராம மக்கள் பரமக்குடி அல்லது பார்த்திபனூருக்கு செல்வதற்கு ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலைமையும் இருந்தது வந்தது.
எனவே, தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டி பரமக்குடி எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.. முருகேசனும் இந்த கோரிக்கையை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார்..
குலவை வரவேற்பு: இதையடுத்து இன்று முதல் ஏனாதிகோட்டையில் இருந்து பார்த்திபனூர் வழியாக பரமக்குடிக்கு புதிய பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.. தினமும் 2 முறை செல்லும் இந்த புதிய பேருந்து சேவையை, எம்எல்ஏ முருகேசனே துவக்கியும் வைத்துள்ளார்... இதனையொட்டி ஏனாதிகோட்டை கிராம மக்கள், முதன் முதலாக ஊருக்குள் வந்த பஸ்ஸுக்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து குலவை போட்டு வரவேற்றனர்...
பிறகு, அந்த பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் பயணம் செய்தனர்.. அத்துடன் எம்எல்ஏ முருகேசனுக்கு ஏகப்பட்ட நன்றிகளை சொல்லி வருகிறார்கள்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.