இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உலகின் வளர்ச்சிக்கு இந்தியா என்ஜினாக திகழும் எனவும் பிரதமர் கூறியுள்ளர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்கில் 15 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பேசினார். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் மேம்பட்டுள்ளதாக கூறினார். உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போது, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் எனவும், ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்கு பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் மோடி தெரிவித்தார். மேலும் சூரிய ஆற்றல், காற்றாலை, மின்சார வாகனம், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் உற்பத்தி மையமாக இந்திய மாறி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு மரபுப்படி பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடியை, அந்நாட்டின் துணை அதிபர் பால் ஷிபோகோசா வரவேற்றார். இதேபோன்று, ஜோகன்னஸ்பெர்கில் பிரதமர் மோடி தங்க இருந்த சொகுசு விடுதியிலும் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க ஆர்ய சமாஜ் தலைவர் ஆர்தி நானக்சந்த் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி, தனது அன்பை வெளிப்படுத்தினார். அந்நாட்டில் கட்டப்பட்டு வரும் சுவாமி நாராயணன் கோயிலின் மாதிரியையும் மோடி பார்வையிட்டார்.