டீக்கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர்.. பினராயி விஜயன் கேட்ட 'நறுக்' கேள்வி

post-img

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார். ஆளுநருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாகவும் விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார் பினராயி விஜயன்.

கேரளாவில் இடது சாரிகளின் ஆட்சி உள்ளது. முதல்வராக பினராயி விஜயன் பதவி வகித்து வருகிறார். அங்கு ஆளுநர் ஆரிப் முகம்மது கானுக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. அண்மையில் சட்டசபை கூட்டத் தொடரிலும் கூட மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நொடிகளிலேயே உரையை முடித்துவிட்டு ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியேறியது சர்ச்சையாகவும் வெடித்தது.

அதேபோல நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சியையும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்திருந்தனர். இந்நிலையில் இன்று கொல்லம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேல் என்ற இடத்தில் ஆளும் இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ (SFI) இயக்கத்தினர் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

சாலையில் தர்ணா: கோ பேக் என்ற முழக்கங்களையும் ஆரிப் கானுக்கு எதிராக முழங்கினர். இதனால், கோபம் அடைந்த ஆளுநர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு போராட்டக்காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அங்கிருந்த டீக்கடை ஒன்றில் இருந்து சேர் ஒன்றை எடுத்து அதில் அமர்ந்து தர்ணா போராடத்தில் ஈடுபடடர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை அங்கிருந்து போக மாட்டேன் என அமர்ந்து கொண்டார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படட்து. போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவ அமைப்பை சேர்ந்த 17 பேர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டு அதன் நகலை காட்டினர். இதைப் பார்த்த பிறகுதான் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆளுநர் ஆரிப் முகம்மது கானின் இந்த செயல் கேரளாவில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் திடீர் பரபரப்பு- டீ கடையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா- SFI கறுப்பு கொடிக்கு பதிலடி!

உரையை படிக்க நேரம் இல்லை: இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரண்பாடன நிலைப்பாட்டை ஆளுநர் தொடர்ந்து எடுக்கிறார். ஆளுநருக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிப்பது என்பது வினோதமாக உள்ளது.

சில ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கு மத்திய பாஜக சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. அந்த பட்டியலில் தற்போது ஆளுநரும் இணைந்து விட்டார். சட்டம் தான் அனைவருக்கும் மேலானது. சட்டதை விட உயர்ந்த அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஆளுநருக்கு ஒன்றரை மணி நேரம் சாலையில் தர்ணா செய்ய நேரம் உள்ளது. சட்டப்பேரவையில் அரசின் உரையை படிக்கத்தான் நேரம் இல்லை" என்றார்.

Related Post