சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் குடும்பத்துடன் செல்வதற்காக ஊட்டியைச் சேர்ந்த அற்புத சகாயராஜ் என்பவர் குடியுரிமை சோதனைக்கு காத்திருந்தார். அப்போது அவர் திடீரென கீழே விழுந்தார்.அவருக்கு நடந்ததை பார்த்து குடும்ப உறுப்பினர்களும் சக பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் ஆடிப்போனார்கள்.
சென்னை விமான நிலையம் என்பது இந்தியாவின் மிகவும் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றாகும். டெல்லி, மும்பை, பெங்களூருக்கு அடுத்தபடியாக மிகவும் பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது. மற்ற மாநகரங்களை ஒப்பிடும் போது சென்னை விமான நிலையம், சென்னையில் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. ஒரு காலத்தில் புறநகர் பகுதியாகஇருந்த விமான நிலையம் இன்று மையப்பகுதிஎன்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு டவுன் பஸ்களையும் விட அதிக அளவு விமானங்கள் வந்த வண்ணம் இருக்கும். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும்,உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. பல ஆயிரம் பயணிகள் தினமும் வந்து செல்லும் இடமாக உள்ளது.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் செல்வதற்காக வரும் பயணிகளுக்கு விமான நிலைய குடியுரிமை பிரிவில் சோதனைகள் நடந்து கொண்டு இருந்தது.
இதனிடையே நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த அற்புத சகாயராஜ் (வயது 52) என்பவர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணிகளாக செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அவர், தனது குடும்பத்தினருடன் குடியுரிமை சோதனைக்காக தாய்லாந்து விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அற்புத சகாயராஜ், திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தார். இதனால் சக பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கடுமையான மாரடைப்பு காரணமாக அற்புத சகாயராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அற்புத சகாயராஜ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 3 பேரின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஏர் ஏசியா விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து பாங்காக் புறப்பட்டு சென்றது. சென்னை விமான நிலைய போலீசார் அற்புத சகாயராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.