சென்னையில் அதிகாலையில் துப்பாகிக்சூடு.. வியாசர்பாடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்!

post-img

சென்னை: ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு போலீஸ் துப்பாகிகளை கையில் எடுத்திருக்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் பிரபல ரவுடியை போலீஸ் சுட்டு பிடித்திருக்கிறது.
போதை பொருட்கள் கடத்தல், வன்முறை, கூலிப்படையாக செயல்படுவது, கொலை, கொலை என தலைநகர் சென்னையில் குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை காவல்துறை செய்து வருகிறது. சில நேரங்களில் போலீசார் வேறு வழியின்றி துப்பாக்கியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் இன்று காலை நடந்திருக்கிறது.

அதாவது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி அறிவழகனை போலீசார் பல்வேறு வழக்குகளில் தேடி வந்திருக்கின்றனர். இந்நிலையில் அவர் பெரம்பூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரை பிடிக்க இன்று அதிகாலை தனிப்படை போலீசார் விரைந்தனர். ஆனால் போலீசாரை தாக்கிவிட்டு அறிவழகன் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்றிருக்கிறார். இதனையடுத்து வேறு வழியின்றி போலிசார் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளனர்.
அறிவழகனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவரை மீட்ட போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் பெரம்பூர் பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் துப்பாக்கிகளை பயன்படுத்துவது குறித்து தொடர் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விமர்சனங்கள் குறித்து காவல்துறை பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post