விஜய்-திரிஷா ஒரே விமானத்தில் பயணித்ததாக வீடியோ வெளியிட்டது யார்? பின்னணியில் இருக்கும் கூட்டு?

post-img
சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் விஜய் மற்றும் திரிஷா, நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனி விமானத்தில் கோவாவுக்கு பயணித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, விமான பயணிகள் பட்டியல் மற்றும் விமான நிலைய காட்சிகள் போன்றவற்றை திமுக ஆதரவு தரப்பு நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர். இந்த நிகழ்வு, தனிமனித சுதந்திரம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விஜய் மற்றும் திரிஷா போன்ற பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை தனியாக வைத்திருக்க உரிமை உண்டு. அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாரை சந்திக்கிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதை பொதுவெளியில் வெளியிடுவது என்பது அவர்களின் தனியுரிமையை மீறுவதாகும். இந்த சம்பவத்தில், சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவுகின்றன. விமான பயணிகள் பட்டியலில் விஜய், திரிஷா மற்றும் சிலரது பெயர்கள் உள்ளன. இந்த லிஸ்ட் உண்மையானதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. விமான நிலைய அதிகாரிகள் இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்திருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அல்லது இந்த பயணம் எப்படி வெளியுலகிற்கு தெரிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது. திமுகவினர் தீவிரமாக விஜயை எதிர்க்கிறார்கள். விஜய் திமுகவை விமர்சித்து பேசுவதும் ஒரு காரணம். இந்த நிலையில்தான், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையத்திற்குள் இருந்து எப்படி திமுகவினர் தகவலை பெற்று சமூக வலைத்தளங்களில் பரப்பினர் என்பது வேறு சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதிமுக, நாதக போன்ற கட்சியினர், திமுகவினரும், பாஜகவினரும் திரைமறைவில் ஒன்றாக செயல்படுவதாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர் இந்த சம்பவம் பல பாடங்களை கற்றுத்தருகிறது. பிரபலங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ உரிமை உண்டு என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் பொதுவெளியின் கவனத்தை ஈர்ப்பவர்கள் என்பதையும் மறக்கக்கூடாது. எனவே விஜய் இனிமேல் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்க வேண்டும். கட்சித் தலைவர் என்பதால் இனி ஒவ்வொரு நாளும் அவர் அக்னி பரிட்சையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதவி என்பது மலர்படுக்கையல்ல, முற்படுக்கை என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். மனைவி, மகன் ஏன் விஜயுடன் ஒன்றாக தோன்றுவதில்லை, திரிஷா எப்படி இவரோடு பயணிக்கலாம், வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்க்காத விஜய், அதெல்லாம் சம்பிரதாயம் எனக்கு உடன்பாடில்லை என்ற விஜய், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ஏன் தனி விமானத்தில் செல்ல வேண்டும். வீடியோ காலிலேயே வாழ்த்து சொல்லியிருக்கலாமே, இந்த சம்பிரதாயம் மட்டும் ஏன்.. இப்படி பல கேள்விகள் வரத்தான் செய்யும். எதையும் எதிர்கொள்ளும் இதயம் இருந்தால்தானே அரசியலில் சாதிக்க முடியும்.

Related Post