மதுரை அரிட்டாப்பட்டியில் நேற்று சினிமா படக்குழு என்ன செய்தது.. கொந்தளிக்கும் மக்கள்

post-img

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்பு தலமான அரிட்டாபட்டி பகுதியில் பாறைகளுக்கு வெடிவைப்பது போல் படப்பிடிப்பு நடத்த முயற்சி செய்த சினிமா படக்குழுவினரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அப்போது படக்குழுவினர் ஏற்கனவே அரசிடம் அனுமதி வாங்கித்தான் இங்கு இப்படி பாறைகளுக்கு வெடிவைப்பது போல் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்று கூறினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த இடம் தான் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும். இதுபற்றி தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.
அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris spp) ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிப்பதற்கான முடிவு கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும்" இவ்வாறு தமிழக அரசு கூறியிருந்தது.
இயற்கை எழில் மிகுந்த அரிட்டாபட்டியில் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட்டின் துணை நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஏல அறிவிப்பு வந்தது முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டி சுற்று வட்டார பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரிட்டாபட்டியில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புகளும் நடப்பது வழக்கமாகும். நேற்று காலை அரிட்டாபட்டிக்கும், மீனாட்சிபுரத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பாப்பு கண்மாய் அருகே சினிமா படப்பிடிப்பு நடந்தது. பொக்லைன், கிரேன், கம்ப்ரசர், கேரவன், சொகுசு பஸ்கள், கார்கள் மற்றும் படப்பிடிப்பு வாகனங்கள், கார்கள் என 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன. அங்கு பாறைகளை வெடிவைத்து தகர்த்து வெடித்து சிதறும் வகையிலான சண்டை காட்சிகளை படமாக்குவதற்கு படக்குழுவினர் தயாராகினர். அதற்காக வெடி பொருட்கள், மண்எண்ணெய் கேன்கள் கொண்டு வந்து, படக்குழுவினர் சில ஏற்பாடுகளை செய்திருந்தனர் இதை அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்ற உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர்

இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நடந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படப்பிடிப்பு குழுவினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்தவும் அவர்களை பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. அப்போது படக்குழுவினர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்துவதாக தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்த அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராம மக்கள், பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய பாதுகாப்பு தலத்தில் பாறைகளுக்கு வெடிவைத்து தகர்ப்பது போல் படம் எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன் அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்விகளை எழுப்பியபடி இருந்தனர். இது குறித்து அறிந்த ஒத்தக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சினிமா படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
டங்ஸ்டன் சுரங்க பிரச்சினையால் அரிட்டாபட்டி பகுதியில் பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வரும் நிலையில், பதற்றமான நிலை இருக்கிறது. தற்போது சினிமா படப்பிடிப்பு என்று கூறி வெடி பொருட்களுடன் பல்வேறு வாகனங்களில் குவிந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post