மாதவிடாய் கால மன அழுத்தத்தால் நிகழ்ந்த கொலை... குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த நீதிமன்றம்! - நடந்தது என்ன?

post-img
மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தூக்கி வீசிய தாய். ஒரு குழந்தை பலியான நிலையில், தாய் அந்த நேரத்தில் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தில் இருந்ததாக, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் உருவாக்கும் பிரச்சனைகள் என்ன? உண்மையில், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் குற்றத்திலிருந்து ஒருவரை விடுவிக்கலாமா? 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், நசிராபாத் பகுதியில் சந்திரா என்ற பெண் தன் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளைக் கிணற்றில் தூக்கிப் போட்டு கொலை செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதில், ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், ஒரு மகன் மட்டும் மீட்க முடியாமல் உயிரிழந்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த வழக்கு நசிராபாத் காவல்துறையால் கொலை வழங்கப் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்ற நீதிபதி அஜ்மர், சந்திரா வழக்கில், குற்றப்பிரிவு 302, குற்றப்பிரிவு 307 மற்றும் 374 குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 302-ன் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.100 அபராதமாகவும் விதிக்கப்பட்டது. வழக்கு, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கறிஞர், வி.ஆர்.பாஜ்வா விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வாதிட்டார். அதில், சந்திரா மாதவிடாய் காலத்திற்கு முந்தைய மன அழுத்தத்தில் இருந்ததாகவும், எனவே அவர் குற்றம் நடந்தபோது, சீரான மனநிலையில் இல்லை என்று வாதிட்டார். அத்துடன், அந்த குழந்தைகளைக் கொல்வதற்கு சந்திராவிற்கு போதிய காரணம் எதுவும் கிடையாது என்று வாதிட்டார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தால் 2018-ம் ஆண்டுதான் இந்த வழக்கிற்குத் தீர்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் முகமது ரபீக் மற்றும் கோவர்தன் பர்தார் வழங்கிய தீர்ப்பில், “பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மன அழுத்தத்தைக் கையாளும் அளவிற்கு இந்தியாவில், சட்டங்கள் விரிவாக்கப்படவில்லை. குற்றம் நிகழ்ந்தபோது சந்திரா, மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தில் இருந்தால் அவற்றை முன் வைக்க உரிமை உண்டு” என்று குறிப்பிட்டார். விசாரணை நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்டவரும் தாக்கப்பட்டுள்ளார், அதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. மருத்துவர் மகேஷ் சந்திரா அகர்வாலிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில், மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தால் பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். அதனால் அவர்களுக்குத் தற்கொலை செய்யும் அளவிற்குச் செல்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர், மாதவிடாய் காலத்திற்கு முந்தைய நிலையிலிருந்ததால், மன அழுத்தத்திற்கு ஆளானதுடன், அவர் சிகிச்சையும் எடுத்துக்கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ஒத்த விளக்கத்தை, மருத்துவர் ஸ்ரீ கோபால் கப்ராவும் வழங்கியுள்ளார். எஸ்.பி.மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மனநல மருத்துவப் பிரிவு பேராசிரியர் மருத்துவர், ஜி.பி.அத்வானி 60 சதவீத பெண்கள் சதாரண மன அழுத்தம் மற்றும் சில உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், 40 சதவீத பெண்கள் ஒரு சராசரி மன அழுத்தம் மற்றும் உடல் பலவீனத்தைச் சந்திப்பதாகவும், அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். பல ஆய்வுகள், மற்றும் மருத்துவர்களின் அறிவுரையைக் கொண்டு விசாரிக்கப்பட்டு, இறுதியில் சந்திராவுக்கு விடுதலை வழங்கியது ராஜஸ்தான் உயர்நீதிமன்றம். மாதவிடாய் காரணம் காட்டி பெண்களை வழக்கிலிருந்து விடுவிப்பது சரியா? மாதவிடாய் என்ற ஒரு காரணத்திற்காகப் பெண்களை வழக்கிலிருந்து விடுவிப்பது சரியாக இருக்குமா என்பது பற்றி, வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசியிருந்தோம். அவர் தரப்பில் சொல்லப்பட்டது பின்வருமாறு, “மாதவிடாய் மன அழுத்ததிற்குச் சரியான சட்டங்கள் எதுவும், இந்தியாவில் இல்லை. மன அழுத்தம் என்பதை depression to what level-பொறுத்து, குற்றவியல் வழக்குகளில் அதுக்குரிய மருத்துவர்களுடன் உறுதி செய்யப்பட்டால் ஒருவேளை ஏற்றுக்கொள்வார்கள். சட்டப்படி எதற்குமே ஒத்துவராத மனநிலையை மட்டுமே கருதிக்கொள்வர். மன அழுத்தம் என்பது ஒருவரால் எந்த அளவிற்குத் தாங்கிக்கொள்ள முடியும் என்ற வித்தியாசம் உள்ளது. இதை பொதுவான சட்டத்தில் கொண்டுவருவதும் பாதுகாப்பற்றதே. இதை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டு, விளக்கப்படுவதே நீதிமன்றத்தின் சட்டப்படி அணுகுவதே சரியாக இருக்கும்” என்றார். இதற்கான தனிச் சட்டம் பற்றிய கேள்விக்கு, “சட்டம் வேண்டும் என்று தோன்றவில்லை. ஏற்கனவே இருக்கும் சட்டங்களையே அதற்கு உரிய தன்மையோடு அணுகினாலே போதும்” என்று குறிப்பிட்டார். மாதவிடாய் எந்த அளவிற்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்? மாதவிடாய் மன அழுத்தால், பெண்கள் அதிக கோபப்படுவது, கடுமையாக நடந்துகொள்ளுவது போன்றவை நாம் தினசரி கவனித்திருப்போம். அது பற்றி மருத்துவர் தில்லைநாச்சியாரிடம் பேசியிருந்தோம். அவர், “மாதவிடாய் மன அழுத்தம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. மாதவிடாய்க்கு ஒருவாரத்திற்கு முன்பே அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். 28 நாட்களுக்குச் சுழற்சியில் ஏற்படும் மாதவிடாயில், திருமணம் ஆகாத பெண்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. எரிச்சல், கோபம், அழுகை, மனச் சோர்வு, அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதன்பின் ரத்தபோக்கு துவங்கிவிட்டால், அவர்களுக்கு இருக்கும் மொத்தம் அழுத்தவும் குறைந்துவிடும். இதற்கு சமூகம் ஆதரவும், மற்றும் குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியமானது. இந்த மாதிரியான மன அழுத்தம் கொலைவரைச் செல்ல வாய்ப்பு குறைவுதான். ஆனால் சில நேரங்களில் அளவு கடந்த மன அழுத்தம் ஏற்படலாம். சிலருக்கு, மனநல மருத்துவரை அணுகும் அளவிற்குப் பிரச்சனைகள் ஏற்படக் கூட வாய்ப்பு உள்ளது. திருமணத்திற்கு மாதவிடாயில் கூட சிலருக்கு மன அழுத்தம் அதிகமான இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், திருமணத்திற்கு முந்தைய மன அழுத்தை விட, இது சிறிய அளவில் குறைய வாய்ப்பு உள்ளது. ஏனெனில், பெண்கள் திருமணத்திற்குப் பின் பல வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதனால், மன அழுத்தம் குறையலாம். இதுபோன்ற மன அழுத்தத்தைப் பெண்கள் தாங்களாக புரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இதைப் பற்றி விவரிக்கலாம். அத்துடன், அவர்கள் அவர்களே பிஸியாக வைத்துக்கொள்ளலாம். மேலும், குடும்ப உறுப்பினர்கள், இதுபோன்ற நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாக இருக்காலாம்” என்று தெரிவித்தார்.

Related Post