ரகுபதி அமைச்சரா.. பேட்டை ரவுடியா?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

post-img
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, பேட்டை ரவுடியா. ரவுடிகள் பேசும் அதே மொழி நடையில் தான் ரகுபதி பேசுகிறார். திமுக 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உண்மையில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் வாங்காது." என கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சபாநாயகர் முதலில் கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும். திமுகவின் அடிப்படைத் தொண்டனை விட திமுகவிற்கு அதிகம் வேலை பார்ப்பது சபாநாயகர் தான். வேல்முருகன் தன்னுடைய தொகுதிக்கு நீர்ப்பாசனம் வராதது குறித்து கேள்வி எழுப்பியவுடன், அப்பாவு தாவுகிறார். அதைப் பார்த்து திமுக அமைச்சர்களே அமைதியாக இருக்கின்றனர். எப்படி அந்த கேள்வி எல்லாம் கேட்கலாம் என்று கேட்கிறார். பாஜகவின் நான்கு எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினாலும் அப்பாவு அதனை தாண்டி செல்வார். சபாநாயகர் தன் இருக்கைக்கு நடுநிலைமையாக இருக்க வேண்டும். ஆட்சியினுடைய பாதி விஷயத்தைப் பேசுவது அப்பாவுதான். சட்டமன்றத்தை திமுக சார்பில் நடத்துவதே அவர்தான். திமுக சார்பில் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். திருமாவளவனைப் பொருத்தவரை, யூ.ஜி.சி வழிகாட்டுதல், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் துணை வேந்தர் தேர்வு செய்ய முடியும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். தமிழக அரசு இதில் தன்னிச்சையாக செயல்படுவதற்கு அதிகாரம் இல்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன்தான் கல்வியில் அரசியல் செய்கிறார். அதன் காரணமாக தான் ஆளுநர் தலையிடுகிறார். துணைவேந்தர் நியமனத்தில் முன்பு முறைகேடு நிலவியது. ரவி ஆளுநரான பிறகு அப்படி நடப்பதில்லை. அவர் சரியான வழியில் பல்கலைக்கழகங்களை வழிநடத்துகிறார். திருமாவளவன் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளார். இவரே தான் கடந்த 2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் திமுகவை எதிர்த்து சண்டை போட்டார். என்சிஆர்டி பாட புத்தகத்தில் அம்பேத்கர் குறித்து விமர்சித்ததற்காக திருமாவளவன் காங்கிரஸ், திமுகவை எதிர்த்து போராடினார். அதை பாஜக தான் நீக்கியது. இவர்களை விடவா பாஜக சமூக நீதியில் பின்னோக்கி உள்ளது. பாஜக எப்போதும் அரசியலமைப்பு சட்டத்துக்கு கௌரவம் தான் கொடுக்கும். எங்கும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடந்து கொண்டதில்லை. திருமாவளவன் அரசியலுக்காக திமுக சொல்வதற்காக கிளிப்பிள்ளை போல நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ரகுபதி சட்டத்துறை அமைச்சரா, பேட்டை ரவுடியா. ரவுடிகள் பேசும் அதே மொழி நடையில் தான் ரகுபதி பேசியுள்ளார். வேலூர் பாஜக நிர்வாகி விட்டல் குமாரை கொலை செய்தது திமுகவினர் தான். திமுகவை எதிர்த்து பாஜக அரசியல் கூட்டங்கள் நடத்தினால் அனுமதியில்லை. இங்கு தீவிரவாதி ஊர்வலத்துக்கு எல்லாம் அனுமதி கொடுக்கிறார்கள். நாங்கள் இஸ்லாமை எதிர்க்கவில்லை. தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை தான் எதிர்க்கிறோம். தமிழக மக்கள் முதலமைச்சரை நாற்காலியில் இருந்து வெளியேற்ற தயாராகிவிட்டனர். சட்டம் ஒழுங்கு, லஞ்ச லாவண்யம் எல்லாம் அவரது கண்ணுக்கு தெரியாது. மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் எதிர்த்து வருகிறார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்." என்றார்.

Related Post