ம.பி. கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி!

post-img
டெல்லி: மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகள் இணைப்புத் தேசியத் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய பிரதமர், இந்தியாவில் நதி நீரின் முக்கியத்துவத்தை முதன்முதலில் புரிந்துகொண்டவர்களில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் ஒருவர் என புகழாரம் சூட்டினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் கென்- பெட்வா நதிகள் இணைப்புத் திட்டமும் ஒன்று. தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதுடன், லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும். இந்த திட்டம் பிராந்திய மக்களுக்கு குடிநீர் வசதிகளையும் வழங்கும். இதனுடன், நீர்மின் திட்டங்கள் 100 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை ஆற்றலை வழங்கும். இந்த திட்டம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். 153 அடல் கிராம சுஷாசன் கட்டிடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். உள்ளூர் அளவில் நல்ல ஆளுகைக்கு வழிவகுக்கும் கிராமப் பஞ்சாயத்துகளின் பணிகளின் நடைமுறை அம்சத்திலும் பொறுப்புகளிலும் இந்த கட்டடங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் நதி நீரின் முக்கியத்துவத்தை முதன்முதலில் புரிந்துகொண்டவர்களில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் ஒருவர் என்று குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள பெரிய நதிப் பள்ளத்தாக்கு திட்டங்கள் டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவரது முயற்சிகளால் மத்திய நீர் ஆணையம் நிறுவப்பட்டது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நீர் சேமிப்பு, பெரிய அணைக்கட்டுத் திட்டங்களில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புக்காக முந்தைய அரசுகள் அவருக்கு உரிய பெருமையை ஒருபோதும் வழங்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னும் நதிநீர் பிரச்சனைகள் உள்ளன என்பதை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகம், நோக்கமின்மை ஆகியவை எந்தவொரு உறுதியான முயற்சிகளையும் தடுத்து நிறுத்தின என்று குறிப்பிட்டார். கடந்த காலங்களில் வாஜ்பாய் அரசு தண்ணீர் தொடர்பான சவால்களை தீவிரமாக எதிர்கொள்ளத் தொடங்கியது என்றும் ஆனால் 2004க்குப் பிறகு அந்த அரசு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் இயக்கத்தைத் தமது அரசு தற்போது துரிதப்படுத்தி வருவதாகக் கூறினார். கென்-பெட்வா இணைப்பு திட்டம் நனவாகவுள்ளது என்றும், புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் வளம், மகிழ்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். சத்தர்பூர், டிக்கம்கர், நிவாரி, பன்னா, தாமோ, சாகர் உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளை அளிக்கும் கென்-பெட்வா இணைப்புத் திட்டத்தின் பலன்களை விளக்கிய நரேந்திர மோடி , இந்தத் திட்டம் பந்தா, மஹோபா, லலித்பூர், ஜான்சி மாவட்டங்கள் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தில் உள்ள பந்தேல்கண்ட் பிராந்தியத்திற்கும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post