சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஏன் போட்டியிடுவதில்லை என்பது குறித்தும் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என எப்போதே அறிவித்துவிட்ட சீமான் இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். நெல்லை, தென்காசி பாராளுமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் கூறினார்.
இது குறித்து சீமான் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- திமுகவை ஒழிக்காமல் இந்த நாட்டில் நல்ல ஆட்சி, நல்ல அரசு, நல்ல அரசியல் என்பதை சத்தியமாக உருவாக்க முடியாது. அநாகரீக அரசியலின் ஆரம்ப புள்ளி எது. வெளிநாட்டு முதலீடுகள் இங்கே வருவதை நான் ஏற்கவில்லை.. எதிர்க்கிறேன். அது என் நாட்டை கொள்ளையடிப்பதற்கான ஒப்பந்தம். அதை நான் எப்போதும் ஏற்க மாட்டேன். எதிர்ப்பேன். நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் என்பது எதற்கு. 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி திமுக மாநாட்டில் கண்காட்சிக்கு வைக்கிறீங்க.
டெல்லிக்கு சென்று கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க வாங்க என்று அழைப்பு விடுக்கும் போது இதை காண்பித்து இருக்கலாம். இங்கே 2 முறை பிரதமர் வந்திருந்த போது அவரிடம் இந்த கையெழுத்துக்களை காண்பித்திருக்கலாம். விளையாட்டுக்கு வாங்க என்று கூப்பிட தெரிந்த உங்களுக்கு நீட்டுக்காக வாங்கிய கையெழுத்துக்களை அவரிடம் காண்பிக்க என்ன தயக்கம். குடியரசு தலைவரிடம் டைம் கேட்டு அவரிடம் நீட் தேர்வு ரத்துக்காக வாங்கிய கையெழுத்துக்களை காண்பித்து இருக்கலாம்.
திராவிடம் என்பதே ஏமாற்று. எப்படியாவது இந்த மக்களை ஏமாற்றுவது என்பது இவர்களது கோட்பாடு. இந்த சூழலில் இருந்து இந்த மக்களை காப்பாற்றுவது எங்களின் கோட்பாடு. இவ்வளவு தான். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னைவிட திறமையான வலிமையான வேட்பாளரை நான் நிறுத்துகிறேன்.
20 ஆண்கள். 20 பெண்கள். எல்லோரும் தகுதியானவர்கள். என் மண்ணின் மக்களின் உரிமைக்காக நான் இங்குதான் நிற்பேன். என்னுடைய கருத்தை என் கட்சியினர் போய் பேசுவார்கள். சட்டமன்ற தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன். நாடாளுமன்ற தேர்தலில் போன முறையும் நான் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.